Published : 27 Feb 2022 06:39 PM
Last Updated : 27 Feb 2022 06:39 PM

ரஷ்ய ராணுவ நடவடிக்கை | கார்கிவ் மீட்பு; சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு - உக்ரைன் பலப்பரீட்சை

கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை 4வது நாளை எட்டியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், "உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தின் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை கோரி முறையிட்டுள்ளது. தனது படையெடுப்பை நியாயப்படுத்தி இன அழிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யா தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையில், உடனடியாக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அடுத்த வாரமே விசாரணையைத் தொடங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

— Володимир Зеленський (@ZelenskyyUa) February 27, 2022

புதினை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? - சர்வதேச கிரிமினல் சட்டம் என்று ஒன்று உள்ளது. சட்டவிரோத படையெடுப்பின் மூலம் ரஷ்ய அதிபர் புதின் கிரிமினல் குற்றம் செய்துள்ளார். அதனால் உக்ரைன் எல்லைக்குள் நடைபெறும் எந்தவித போர்க்குற்றமும் சர்வதேச கிரிமினல் நீதிமன்ற (International Criminal Court -ICC) விசாரணை வரம்புக்குள் வரும். ஆனால், புதின் இங்கு கைக்கட்டி நிற்க மாட்டார்.

காரணம், இந்த அமைப்பின் மிகக் குறுகிய அதிகாரம். ரோம் பிரகடனத்தை ஒப்புக்கொண்டு ஏற்ற நாடுகள் தான் ஐசிசி விசாரணை வரம்புக்குள் வரும். உக்ரைன் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், ரஷ்யா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், ஐசிசி என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ரஷ்யாவை விசாரிக்கும் அதிகாரமில்லை. மிக முக்கியமாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ரஷ்யாவை உறுப்பு நாடு அல்ல என்று கூறினால் மட்டுமே விசாரிக்க முடியும். அப்படி ஒரு நிலை வந்தால், அதையும் ரஷ்யா தனது பி5 வீட்டோ அதிகாரத்தை வைத்து வெட்டி எறியும்.

ஐசிசி மட்டும்தான் இப்படியான போர்க்குற்றங்களை விசாரிக்க முடியுமா என்றால், இல்லை. உலகின் எந்த ஒரு நாடும், பொதுமக்கள் மீது திட்டமிட்டே நிகழ்த்தப்படும் தாக்குதல், மிக மோசமான போர்க்குற்றங்கள் மீது தாமாக முன்வந்து விசாரிக்கலாம். அதற்கு ஒரே தகுதியாக அவர்கள் நாட்டுச் சட்டத்தில் அப்படியாக பிற நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள், போர்க்குற்றவாளிகளை விசாரிக்கும் ஷரத்துகள் இடம்பெற்றிருந்தால் போதும். ஜெர்மனி, நெதர்லாந்து, உக்ரைன் ஏன் ரஷ்யா சட்டத்திலும் அதற்கு வழி இருக்கிறது.

ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை கஸ்டடியில் எடுப்பதில் சிக்கல் இருக்கிறது. அதுவும் ஒரு நாட்டின் தலைவரே குற்றவாளியாக இருக்கும்போது அவரை வெளிநாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. அவருக்கு அதிலிருந்து அவரது நாட்டுச் சட்டங்களே விலக்கு (இம்யூனிட்டி) அளித்திருக்கும்.

கார்கிவ் மீட்பு: 4ஆம் நாளான இன்று காலையில், ரஷ்ய ராணுவம் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமாக கார்கிவை கைப்பற்றியதாக அறிவித்தது. ஆனால் மாலையில் கார்கிவ் நகரை மீண்டும் தங்கள் வசத்துக்கே கொண்டு வந்ததாக பிராந்திய நிர்வாகத் தலைவர் ஓலெக் சின்குபோவ் தெரிவித்துள்ளார். அவர் தனது டெலிகிராம் பக்கத்தில், உக்ரைன் நடத்திய க்ளீன் அப் நடவடிக்கையில் கார்கிவில் இருந்து ரஷ்யப் படைகள் அப்புறப்படுத்தப்பட்டன. ஒரு சிறிய படையினர் கார்கிவுக்குள் ஊடுருவியிருந்த நிலையில் அவர்களை நாங்கள் வீழ்த்தியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய பணக்காரர் உதவி: ஜப்பானைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக தொழிலதிபரான மிக்கிடானி உக்ரைனுக்கு 8.7 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். உக்ரைன் மக்களுக்காக வேதனைப்படுகிறேன். ஒரு ஜனநாயக நாட்டின் மீது அத்துமீறி படைபலத்தைப் பயன்படுத்தி அமைதியைக் குலைப்பது சரியல்ல. ரஷ்யாவும், உக்ரைனும் இப்பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியின் ஆயுத உதவி: உக்ரைனுக்கு உதவ வேண்டியது தங்களது கடமை எனக் குறிப்பிட்டுள்ள ஜெர்மனி பிரதமர் ஒலஃப் ஸ்கால்ஸ், தங்கள் நாடு நீண்ட காலமாக கொண்டிருந்த கொள்கையிலிருந்து விலகி, உக்ரைனுக்கு 1000 டாங்க் எதிர்ப்பு ஆயுதங்கள், 500 ஸ்டிங்கர் வகையறா சர்ஃபேஸ் டூ ஏர் ஏவுகணைகளை அனுப்புவதாக ஒப்புதல் அளித்துள்ளது.

4 ஆம் நாளில் உக்ரைன், தன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், உக்ரைனில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x