Published : 27 Feb 2022 05:07 PM
Last Updated : 27 Feb 2022 05:07 PM

'ஹிட்லரை வீழ்த்தினோம்; புதினையும் வீழ்த்துவோம்': உக்ரைன் வெளியுறவு அமைச்சர்

கீவ்: ஹிட்லரை தோற்கடித்தோம்; இப்போது ஒன்றிணைந்து புதினையும் தோற்கடிப்போம் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, அதிபர் வொலடிமிரி ஜெலன்ஸ்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தங்கள் படைகளுடன் இணைந்து சண்டையிட விருப்பமுள்ள வெளிநாட்டுப் படையினர் கொண்ட கூட்டுப் படையை உருவாக்கி வருகிறோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில், "உக்ரைனைப் பாதுகாக்க விரும்பும் வெளிநாட்டவர், உலக அமைப்புகள் வரவேற்கப்படுகிறது. இவை உக்ரைன் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படை என அறியப்படும். இந்தப் படையின் இணைய விரும்புவோர், அவரவர் நாட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்தை அணுகலாம். நாம் இணைந்தே ஹிட்லரை வீழ்த்தினோம். இணைந்தே புதினை வீழ்த்துவோம்" என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

முதலாம் உலகப் போரின் போது உக்ரேனியர்கள் ஆஸ்திரியா தலைமையிலான மத்தியப் படைகளில் இருந்தனர். ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் ராணுவ, உக்ரைனில் திரட்டப்பட்ட படைகளை ரஷ்ய சாம்ராஜ்யத்துக்கு எதிராகப் போராடப் பயன்படுத்தியது. இது பின்னாளில் உக்ரேனியன் காலிசியன் ராணுவமாக அறியப்பட்டது. முதல் உலகப் போர் (1914-18) முடிந்த பின்னர் இந்தப் படை போல்ஷெவிக்ஸ், போலிஷ் படைகளை எதிர்த்து போரிட்டது. ஆனால், முதல் உலகப் போரின்போது உக்ரைனின் சில படைப்பிரிவுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போரிட்டன.

ஆனால், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாசிப் படைகளுக்கு எதிராக 4.5 மில்லியன் உக்ரேனியர்கள் சிவப்புப் படையில் இணைந்தனர். இந்தப் படை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க பணிகளை செய்ததாக அறியப்படுகிறது.

இந்த வரலாற்றின் அடிப்படையில் தான் தற்போது உக்ரைன் வெளியுறவு அமைச்சர் சர்வதேச படையை உருவாக்கி புதினை வீழ்த்த அறைகூவல் விடுத்துள்ளார்.

மேலும், தற்போது உக்ரைனில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரின் கைகளிலுமே ராணுவம் ஆயுதங்களை வழங்கிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மக்களும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதால் ரஷ்யப் படைகளும் குடியிருப்புப் பகுதிகளையும் கூட விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x