'இந்தியா இயன்றதை செய்யும்' - உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி

'இந்தியா இயன்றதை செய்யும்' - உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடியுடன் போர் சூழல் குறித்து பேசியுள்ளார். இதில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கோரிக்கை வைத்த நிலையில், அவரிடம் இந்தியா இயன்றதை செய்யும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் உக்ரைனை ஒட்டிய பல்வேறு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று போர் சூழல் குறித்து பேசினார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், "உக்ரைனில் தற்போது நிலவி வரும் போர் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் அதிபர் ஜெலென்ஸ்கி விளக்கமாக எடுத்துரைத்தார். நடைபெற்றுவரும் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் சொத்துகளின் சேதம் குறித்து பிரதமர் தமது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்தார். உடனடியாக வன்முறையை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு தாம் விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அமைதி முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த அளவுக்குப் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாகக் கூறினார்.

உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்புக் குறித்து பிரதமர் தமது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார். இந்தியர்களை அங்கிருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றுவதற்கு உக்ரேனிய அதிகாரிகளின் உதவியையும் பிரதமர் கோரினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த உரையாடல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, "ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in