Last Updated : 26 Feb, 2022 05:45 PM

 

Published : 26 Feb 2022 05:45 PM
Last Updated : 26 Feb 2022 05:45 PM

உக்ரைன் துயரம் | ரஷ்யாவைக் கட்டுப்படுத்த சர்வதேச சட்டங்களுக்கு அதிகாரம் இல்லையா? - ஒரு தெளிவுப் பார்வை

"அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றால், அதை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் கூட அதை அத்துமீறுபவராக இருக்ககூடாது. அப்படியிருந்தால் அமைதிக்கு குந்தகம்தான். அதைத்தான் ரஷ்யா செய்து கொண்டிருக்கிறது."

”உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுகிறேன்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரி 24-ஆம் தேதி அறிவிக்கிறார். அது ரஷ்யாவில் பின்னிரவு, இந்தியாவில் அதிகாலை. இந்தியாவில் காலை 8 மணிச் செய்திகளிலேயே ரஷ்யாவின் முதல் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. பொழுது விடிவதற்கு முன்னதாக குண்டுகள் பொழியத் தொடங்கின. முதலில் ரஷ்யா ”எங்களின் இலக்கு கிழக்கு உக்ரைன்தான்” என்றது. ஆனால் இன்று மூன்றாவது நாளாக ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன. கீவ் நகரை ரஷ்யப் படைகள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவை எதிர்த்துக் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் நீர்த்துப் போனது. அப்படியென்றால், ரஷ்யாவை கட்டுப்படுத்த சர்வதேச சட்டங்களுக்கு வலிமையில்லையா என்ற கேள்வி எழாமல் இல்லை.

சட்டத்தை மீறிவிட்டதா ரஷ்யா? - உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்ததே சட்டமீறல்தான். உக்ரைனுக்கு தனது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணவும், சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் உரிமை இருக்கிறது. அப்படியிருக்க, சுதந்திர நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளதே சட்ட விரோதம்தான். டானெட்ஸ், லுஹான்ஸ்க் என்ற கிழக்கு உக்ரைன் நகரங்களை சுதந்திர நாடாக ரஷ்யா அறிவித்ததும் அயோக்கியத்தனமானதே. ஐ.நா. அமைப்பு உருவாக்கத்திற்கு முன்னர் வேண்டுமானால் நாடுகள் ஆக்கிரமிப்பு என்பது சாத்தியமாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போதைய சூழலில் சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு என்பது பழைய கருத்தாக்கம்.
1928-ல் கெல்லாக் பிரயண்ட் ஒப்பந்தத்துக்குப் பின்னர் போர் என்பது திட்டவட்ட சட்டவிரோதச் செயல் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளது. அதேபோல் 1945-ல் சர்வதேச ராணுவ தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. அதன் ஷரத்துக்களும் ஆக்கிரமிப்பு நோக்கில் போருக்கு திட்டமிடுதல், ஆயத்தமாகுதல், போர் தொடுத்தல் ஆகியன அமைதிக்கு எதிரான குற்றங்கள் எனக் குறிப்பிடுகின்றன.

எல்லாவற்றையும் மீறி உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் சர்வதேச உறவுகளைப் பேணுவதில் பிற நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்துக்கு எதிரானது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் என்னதான் செய்ய முடியும்? - சரி, இத்தனை சட்டங்கள் இருந்தும் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறதே? அப்படியென்றால் இத்தனை சட்டங்கள் இருந்தும் பயன் என்ன?!

ஐ.நா. சபை நிறுவப்பட்டதன் முக்கியக் காரணமே உலகின் பலம் பொருந்திய நாடுகளுக்கு இடையே மீண்டும் பெரிய போர்கள் உருவாகக் கூடாது என்பதே. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், கடந்த 75 ஆண்டுகளில் உலக நாடுகள் பல அணிகளாக திரண்டு நடத்தும் போர் என்று ஏதும் நடைபெறவில்லை. இதுவே ஐ.நா.வின் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் என்று உருவாக்கப்பட்டது. இவற்றின் உறுப்பு நாடுகள் பலவும் இரண்டாம் உலகப் போரை வென்ற கூட்டாளிகள். சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஐ.நா.வின் சட்டங்களுக்கும் ’மேல்’ என்ற நிலையில் அமர்ந்துள்ளன. இவர்கள் ’P5’ என்ற நிரந்தர உறுப்பு நாடுகளாக அமர்ந்தனர். இவர்களுக்கு ஐ.நா.வின் நடவடிக்கைக்கு எதிராக வெட்டு அதிகாரமும் (வீட்டோ அதிகாரமும்) உள்ளது. இது திட்டமிட்டே வழங்கிக்கொள்ளப்பட்ட சலுகை. இந்த உறுப்பு நாடுகள் தங்களுக்குள் ஒரு சமநிலையுடன் பிரச்சினைகளை அணுகிக்கொள்ளும். இதனாலேயே ஐ.நா.வில் இந்த நிரந்தர உறுப்பு நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. ஆனால், சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர், பி5 நாடுகள் பரஸ்பரம் தங்களுக்குள் கட்டுப்பாட்டுடன் சமநிலையுடன் நடந்துகொள்ளும் போக்கு நழுவிச் சென்றது.

1990-களில் அமெரிக்காவும், பிரிட்டனும், பாதுகாப்பு கவுன்சிலை தங்களின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் தரும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கின. பின்னாளில், 2003-ல் ஈராக் படையெடுப்பின்போது அமெரிக்காவும், பிரிட்டனும் தன்னிச்சையாகவே செயல்பட்டன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் என்பது எதையும் தடுக்கும் அதிகாரமற்ற அமைப்பானது.

அதே நிலைதான் இப்போதும் நிலவுகிறது. ரஷ்யா சுதந்திரமான ஆக்கிரமிப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை அறிவித்தபோது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் நடந்து கொண்டுதான் இருந்தது. அப்போது பேசிய ஐ.நா.வுக்கான உக்ரைன் தூதர், ”போர்க் குற்றவாளிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்கள் நேரடியாக நரகத்துக்குச் சென்றுவிடுவார்கள்” என்று சபித்தார். அதுமட்டும்தான் அவரால் முடிந்தது. அதை மட்டும்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அனுமதிக்கவும் முடிந்தது.

வேறு என்னதான் வழி? - ஜி7 நாடுகள் கூட்டாகவும், அமெரிக்கா, பிரிட்டன் என ஐரோப்பிய நாடுகள் தனித்தனியாகவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன. நீர்த்துப்போன ஐ.நா கவுன்சிலை தாண்டி இது ஒரு முக்கிய நடவடிக்கை. இதனால் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக அசைத்து, படையெடுப்பு வேகத்தைக் குறைக்கச் செய்யலாம்.

இன்னொரு வழி, ஐ.நா சாசனத்தின் சட்டப்பிரிவு 51-ஐ பிரகடனப்படுத்தலாம். இது தனி நாடுகள் தங்களின் இறையாண்மைக்கு எதிராக அத்துமீறி படையெடுக்கும் நாடுகளின் மீது தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து தற்காப்பில் ஈடுபடலாம். இதன் மூலம் உக்ரைன் பிற நாடுகளிடமிருந்து ராணுவ உதவியைப் பெறலாம். 1990-ல் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தபோது குவைத் இதுபோன்ற உதவியை நாடியது.

ரஷ்யாவின் நிரந்தர உறுப்பினர் பதவி ரத்தாகுமா? - இப்போது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா பெற்றுள்ள நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதில் 'இல்லை’ என்பதே. சோவித் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யா அந்த அந்தஸ்தை வாரிசு சொத்து போல் பெற்றுக்கொண்டது. அதை அப்போதே அங்கீகரித்திருக்கக் கூடாது என்ற அங்கலாய்ப்பு மட்டுமே மிச்சம். மேலும், ஐ.நா சாசனம் 108-ன் படி ரஷ்யாவை நீக்க வேண்டும் என்றால், அதற்கு பி5 நாடுகளின் அங்கீகாரம் வேண்டும். பி5 ரஷ்யாவையும் உள்ளடக்கியதுதானே.

இதை வைத்து ஒன்று தெளிவாகிறது: அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றால், அதை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் கூட அதை அத்துமீறுபவராக இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அமைதிக்கு குந்தகம்தான். அதைத் தான் ரஷ்யா செய்து கொண்டிருக்கிறது.

புதினை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? - சர்வதேச கிரிமினல் சட்டம் என்று ஒன்று உள்ளது. சட்டவிரோத படையெடுப்பின் மூலம் ரஷ்ய அதிபர் புதின் கிரிமினல் குற்றம் செய்துள்ளார். அதனால் உக்ரைன் எல்லைக்குள் நடைபெறும் எந்தவித போர்க்குற்றமும் சர்வதேச கிரிமினல் நீதிமன்ற (International Criminal Court -ICC) விசாரணை வரம்புக்குள் வரும். ஆனால், புதின் இங்கு கைக்கட்டி நிற்க மாட்டார். ஏனெனில், இந்த அமைப்பின் மிகக் குறுகிய அதிகாரம். ரோம் பிரகடனத்தை ஒப்புக்கொண்டு ஏற்ற நாடுகள் தான் ஐசிசி விசாரணை வரம்புக்குள் வரும். உக்ரைன் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், ரஷ்யா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், ஐசிசி என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ரஷ்யாவை விசாரிக்கும் அதிகாரமில்லை. மிக முக்கியமாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ரஷ்யாவை உறுப்பு நாடு அல்ல என்று கூறினால் மட்டுமே விசாரிக்க முடியும். அப்படி ஒரு நிலை வந்தால், அதையும் ரஷ்யா தனது பி5 வீட்டோ அதிகாரத்தை வைத்து வெட்டி எறியும்.

ஐசிசி மட்டும்தான் இப்படியான போர்க்குற்றங்களை விசாரிக்க முடியுமா என்றால், இல்லை. உலகின் எந்த ஒரு நாடும், பொதுமக்கள் மீது திட்டமிட்டே நிகழ்த்தப்படும் தாக்குதல், மிக மோசமான போர்க்குற்றங்கள் மீது தாமாக முன்வந்து விசாரிக்கலாம். அதற்கு ஒரே தகுதியாக அவர்கள் நாட்டுச் சட்டத்தில் அப்படியாக பிற நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள், போர்க்குற்றவாளிகளை விசாரிக்கும் ஷரத்துகள் இடம்பெற்றிருந்தால் போதும். ஜெர்மனி, நெதர்லாந்து, உக்ரைன் ஏன் ரஷ்யா சட்டத்திலும் அதற்கு வழி இருக்கிறது.

ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை கஸ்டடியில் எடுப்பதில் சிக்கல் இருக்கிறது. அதுவும் ஒரு நாட்டின் தலைவரே குற்றவாளியாக இருக்கும்போது அவரை வெளிநாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. அவருக்கு அதிலிருந்து அவரது நாட்டுச் சட்டங்களே விலக்கு (இம்யூனிட்டி) அளித்திருக்கும்.

இப்போதைக்கு என்னதான் செய்யலாம்?! - ஒன்றே ஒன்றை மட்டும் சர்வதேச சமூகம் செய்யலாம். ரஷ்யாவின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டலாம். உக்ரைனின் தற்காப்புக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்கலாம். சர்வதேச சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் ஓட்டைகளை அடைத்துச் செயலாக்கத்துக்குக் கொண்டு வர சர்வதேச நாடுகள் அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

கட்டுரைக்கு உறுதுணை: theconversation.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x