Published : 25 Feb 2022 10:25 AM
Last Updated : 25 Feb 2022 10:25 AM

2-ம் நாள் ராணுவ நடவடிக்கை: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா குண்டு மழை; செர்னோபிலைக் கைப்பற்றியதால் பதற்றம்

செர்னோபில் அணு உலை அருகே ரஷ்ய ராணுவ டாங்கர்

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இரண்டாம் நாளை எட்டியுள்ள நிலையில் தலைநகர் கீவில் வெடுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கீவ் நகரில் பதற்றமான சூழலில் நிலவுகிறது.

உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இன அழிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மிக நேர்த்தியாக வார்த்தைகளைக் கையாண்டு போரைத் தொடங்கிய ரஷ்யா இரண்டாம் நாளான இன்று தலைநகர் கீவைக் குறிவைத்துள்ளது.

தலைநகர் கீவ் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இதனை உக்ரைன் அரசும் உறுதி செய்துள்ளது. ஆனால் பதிலடியாக ரஷ்யாவின் போர் விமானத்தை தங்களின் ஏர் டிஃபன்ஸ் சிஸ்டம் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனை ரஷ்ய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆன்டன் ஹெரான்ஸ்சென்கோ தெரிவித்துள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் ஆளில்லா விமானமா என்ற சந்தேகம் இருப்பதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது. அந்த விமானம் குடியிருப்புப் பகுதியில் இருந்த 9 அடுக்குமாடி குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது. அந்தக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் வலுத்துள்ள நிலையில் தலைநகர் கீவில் உள்ள மக்கள் ரயில்கள், கார்கள் மூலம் வெளியேறி வருகின்றனர். ஆனால் 18 வயதுள்ள 60 வயதான ஆண்கள் வெளியேற உக்ரைன் தடை விதித்து வருகிறது.
ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனின் வடகிழக்கு எல்லையில் உள்ள ஜேப்போரிஸியா பகுதியைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பகுதி அஸோவ் கடற்கரையை ஒட்டியுள்ளது. நிலம், கடல், வான்வழி என அனைத்து வகைகளிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் செர்னோபில் அணுஉலை: உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து 65 மைல் தொலைவில் உள்ள பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் செர்னோபில் அணு உலை இயங்கிவந்தது. 1970-களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்த அணு உலையில் நான்கு உலைகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 1,000 மெகாவாட் மின்சக்தி உற்பத்திசெய்யும் திறன் கொண்டவை. 1986 ஏப்ரல் 25-ல், நான்காம் எண் உலையில் ஏற்பட்ட விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் நடந்த இந்த பெரும் விபத்து தான் உலக நாடுகளில் பலரும் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை இன்றளவும் முன்னெடுக்கக் காரணமாக இருக்கிறது. 2000-ல், செர்னோபிலின் கடைசி உலை மூடப்பட்டது. இந்நிலையில் செர்னோபில் உள்ள அணு உலை பாதுகாப்பு ஊழியர்களை ரஷ்யா சிறைப்பிடித்துள்ளது. ரஷ்ய படைகள் வீசிய குண்டு ஒன்று செர்னோபில் அணுக்கழிவில் விழுந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளி மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, நாங்கள் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பிணையாகப் பிடித்து வைத்துள்ள அணு உலை பாதுகாவலர்களை ரஷ்யா விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

செர்னோபில் விபத்து நடந்தது எப்படி? 1986 ஏப்ரல் 25-ல், நான்காம் எண் உலையில் ஒரு மின் – பொறியியல் சோதனையை நடத்த சில பொறியாளர்கள் திட்டமிட்டனர். அணு உலையில் உள்ள காற்றாடி, தனது அசைவற்ற சக்தியின் மூலம் அவசரகால தண்ணீர்ப் பம்புகளை இயக்குமா என்று கண்டறியும் சோதனையை நடத்திய பொறியாளர்கள் அணு உலை இயற்பியல் தொடர்பான அறிவுத் திறன் இல்லாதவர்கள். சோதனையைச் சரியாகத் திட்டமிடாத பொறியாளர்கள், பல தவறுகளைச் செய்தனர். இதனால் அணு உலையில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு, 50 டன்னுக்கும் அதிகமான கதிரியக்கப் பொருட்கள் காற்றில் பரவத் தொடங்கின. விபத்து நடந்த மறுநாள், பிரிப்யாட் ஆற்றின் அருகில் வசித்துவந்த 30,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். ஓரிரு நாட்களிலேயே 32 பேர் உயிரிழந்தனர். கதிரியக்கம் பரவியதைத் தொடர்ந்து புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் காரணமாக, சுமார் 5,000 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். வளிமண்டலத்தில் பரவிய கதிரியக்கம், ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட பல மடங்கு அதிகமானது.

இப்போது போரில் செர்னோபில் அணுக் கழிவுகளால் எந்த ஆபத்தும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று உலகமே அச்சத்தில் உள்ளது. அதனாலேயே அங்கிருந்து ரஷ்யப் படைகள் விலக வேண்டும். அணு உலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

மேலும், செர்னோபிலில் இருந்து தலைநகர் கீவ் வெகு அருகில் தான் இருக்கிறது என்பதால் ரஷ்யா இன்றைக்குள் கீவ் நகரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x