Published : 24 Feb 2022 09:04 AM
Last Updated : 24 Feb 2022 09:04 AM

மூண்டது போர்! - உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு

ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரே வாரத்தில் இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. சற்று முன்னர் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஜெனீவாவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ரஷ்ய மக்களுக்காக தொலைக்காட்சியில் அதிபர் புதின் உரையாற்றியுள்ளார். அந்த உரையில் நான் உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார். மேலும், உக்ரைன் தனது ஆயுதங்களை கீழே போடவேண்டும். இல்லாவிட்டால் பதிலடி கொடுக்க ரஷ்யா தயங்காது என்று கூறினார்.

அதேபோல், நேற்று உக்ரைன் அதிபர் வோளோடிமிர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ரஷ்யா விரைவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய போரை தொடங்கவுள்ளது என்று கூறியிருந்தார். மேலும் நாட்டில் போர் பதற்றம் நிலவுவதால் அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்தார். டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இந்த உத்தரவு நாடு முழுவதற்கு பொருந்தும் என்றும் இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் வோளோடிமிர் ஜெலன்ஸ்கி

மேலும் போரை நிறுத்தும் வலிமை ரஷ்ய மக்களுக்குத்தான் உள்ளது எனக் கூறி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். கிழக்கு உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. அங்கு சிவில் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

18 வயது முதல் 60 வயது உடைய அனைவரும் கட்டாயமாக ராணுவத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருளாதரத் தடைகள்: இதற்கிடையில், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடாக அறிவித்தார். இது உக்ரைன் மீதான படியெடுப்புக்கு தோதாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதனையடுத்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் வீரர்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, புதின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடாக அறிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் எனவும் கூறியுள்ளதோடு, ரஷ்ய மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யா மீது உடனடியாக பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பின்னணி: 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது.

இந்நிலையில் கிழக்கு உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதோடு சரணடையுமாறும் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x