Published : 09 Apr 2016 11:03 AM
Last Updated : 09 Apr 2016 11:03 AM

உலக மசாலா: செந்தாமரைகளின் கடல்!

தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்பவாபி ஏரியை, ‘செந்தாமரை களின் கடல்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன. இந்த ஏரியில் பூத்திருக்கும் செந்தாமரைகளைக் காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். செந்தாமரைகளைப் பார்ப்பதற்கு அதிகாலை ஏற்ற நேரம். பூக்கள் முழுவதுமாக விரிந்திருக்கும்.

அதனால் பகல் முழுவதும் இந்த ஏரி பரபரப்பாகவே இருக்கிறது. சிறிய கட்டுமரம், படகுகளில் செந்தாமரைகளுக்கு நடுவே சுற்றி வரலாம். புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஏரி பெரிதாக இருந்தாலும் ஒரு மீட்டர் ஆழமே கொண்டது. பாவோ நதியில் இருந்து ஏரிக்குத் தண்ணீர் வருகிறது. 5 மாதங்கள் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளை வைத்தே இந்த மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது.

ஆஹா! லட்சக்கணக்கான செந்தாமரைகளின் சங்கமம்!

பூனைகள் பொதுவாகச் சுதந்திரத்தை விரும்பும் பிராணிகள். நாய்களைப் போல அவ்வளவு நெருக்கமாகவோ, விசுவாசமாகவோ இருப்பதில்லை. ரஷ்யாவின் பெல்கோர்ட் நகரில் கடந்த ஆண்டு ஒரு பூனை தன்னந்தனியே சாலையில் அமர்ந்திருப்பதை ஆஸ்டாப் ஸடுனாஸ்கி என்பவர் பார்த்தார். அடுத்தடுத்த நாட்களிலும் பூனை அதே இடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அருகில் குடியிருந்தவர்களிடம் விசாரித்தார். அந்தப் பூனையை வளர்த்தவர், வீட்டை விற்றுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். அவர் காரில் போகும்போது இந்தப் பூனையும் காரைத் துரத்திக்கொண்டு வந்தது.

இந்த இடத்தில் கார் வேகமாக மறைந்துவிட்டது. பூனை அப்படியே நின்றுவிட்டது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் இந்த இடத்துக்கு வந்து, தன் உரிமையாளருக்காகக் காத்திருக்கிறது! அருகில் வசிக்கும் மக்கள் பூனைக்குத் தேவையான உணவுகளை வழங்குகிறார்கள். ஓராண்டு காலமாகக் காத்திருக்கும் பூனைக்கு உதவ முடிவு செய்தார் ஆஸ்டாப். பூனையைப் புகைப்படம் எடுத்து, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதுவரை பூனையைத் தேடி யாரும் வரவில்லை.

உரிமையாளரே, உங்களுக்காக ஒரு ஜீவன் காத்திருக்கிறது!

பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஒளி புகும் மரத்தைக் கண்டறிந்துவிட்டனர். ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த கேடிஹெச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கண்ணாடி போல மரத்தை உருவாக்கியிருக்கிறது. கட்டிடக் கலையிலும் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்திலும் இந்தக் கண்டுபிடிப்பு மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்கிறார்கள். ஒளி ஊடுருவும் மரம் விலை குறைவாகவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தால், கண்ணாடிகளுக்குப் பதில் இவற்றைப் பயன்படுத்தலாம். ஜன்னல்களில் பொருத்தினால் வீட்டுக்குள் வெளிச்சம் தாராளமாக வரும். மின்சாரத்தின் தேவையும் குறையும். கண்ணாடி போல அப்படியே பிம்பத்தைப் பார்க்க முடியாது. பகுதி அளவில் கண்ணாடி போல இருக்கும். மரத்தைக் கண்ணாடி போல மாற்றும் முயற்சி நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. இந்த ஒளி புகும் மரத்தில் 80 முதல் 95 சதவீதம் ஒளி ஊடுருவ முடியும். இது கண்ணாடியை விட இரண்டு மடங்கு உறுதியானது. இன்னும் இந்தத் தொழில் நுட்பத்தை மேம்படுத்த இருக்கிறார்கள்.

அட! கண்ணாடி மரம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x