அணு ஆயுதம் பெருகுவது பற்றி ஒபாமா கவலை: இந்தியாவின் கருத்துக்கு வெள்ளை மாளிகை விளக்கம்

அணு ஆயுதம் பெருகுவது பற்றி ஒபாமா கவலை: இந்தியாவின் கருத்துக்கு வெள்ளை மாளிகை விளக்கம்
Updated on
1 min read

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் பெருகி வருவது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கவலை அடைந்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒபாமா கூறியதை இந்தியா குறை கூறியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலாளர் ஜோஷ் எர்ன்ஸ்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் பெருகி வருவது குறித்து ஒபாமா கவலை அடைந்துள்ளார். அணு ஆயுத பெருக்கத்தால் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அமெரிக்கா கவலைப்படுகிறது.

குறிப்பாக, இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் பேரழிவு ஏற்படும். இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில்தான், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒபாமா கருத்து தெரிவித்திருந்தார்.

அணு ஆயுதங்களே இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சமீபத்தில் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும் என்றும் இதனால் அந்த பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடைபெற்ற அணுஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டின் நிறைவு நாளில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறும்போது, “இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைத்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “இந்தியாவின் தற்காப்பு நிலைப்பாட்டை அமெரிக்கா முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. எந்த ஓர் அண்டை நாட்டுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதுதான் இந்தியாவின் கொள்கை” என்று கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in