கனடாவில் திவாலான 3 கல்லூரிகள் மூடல்: 2,000 இந்திய மாணவர்கள் தவிப்பு

கனடாவில் திவாலான 3 கல்லூரிகள் மூடல்: 2,000 இந்திய மாணவர்கள் தவிப்பு
Updated on
1 min read

டொரண்டோ: கனடாவின் மான்ட்ரீல் நகரில் உள்ள மூன்று கல்லூரிகள் திவாலானதாக அறிவித்து மூடிவிட்டன. கடந்த மாதம் இக்கல்லூரிகள் மூடப்பட்டதால் இந்தியாவைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

சிசிஎஸ்க்யூ கல்லூரி, எம் கல்லூரி மற்றும் சிஇடி கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் மாணவர்களிடம் கல்லூரிக் கட்டணமாக பல லட்சம் டாலர்களை வசூலித்தன. திவால் அறிவிப்பு வெளியிடும் முன்பு கல்விக் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலித்தன. இந்தக் கல்லூரிகள் மூடப்பட்ட தால் அங்கு பயின்ற சுமார் 2 ஆயிரம்இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதில் பலர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். கல்லூரி நிர்வாகத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இவர்கள் தெரிவித்தனர். தங்களது பிரச்சினையை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக மாணவர்கள் பேரணியும் நடத்தினர். இந்த விவகாரத்தில் கனடா அரசு தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் தங்களது படிப்பைத் தொடர வழியேற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

படிப்பு முடியும் நிலையில் உள்ளமாணவர்கள் படிப்பை முடிப்பதற்கும், முந்தைய மதிப்பெண் அடிப்படையிலேயே அவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்தனர்.

வெளிநாட்டிலிருந்து கனடாவில் தங்கி பயிலும் மாணவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே பகுதி நேர பணி செய்ய முடியும். கல்லூரி மூடப்பட்டதால் தங்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கையில் செலவுக்கு பணமின்றி சிரமப்படுவதாகவும் மாணவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இங்கு பயின்ற மாணவர்கள் தவிர இந்தியாவிலிருந்தே ஆன்லைன்மூலம் படிக்கும் 700 மாணவர்களும் இம்மூன்று கல்லூரிகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in