ரூ.395 கோடி நிதி முறைகேடு வழக்கில் வங்கியாளருக்கு 30 ஆண்டு சிறை: வியட்நாம் நீதிமன்றம் தீர்ப்பு

ரூ.395 கோடி நிதி முறைகேடு வழக்கில் வங்கியாளருக்கு 30 ஆண்டு சிறை: வியட்நாம் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

வியட்நாமில் பல கோடி ரூபாய் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஒரு பிரபல வங்கியாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. அத்துடன் ரூ.20 கோடி அபராதமும் விதித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஹனோய் மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் குயென் ஹூ சின் தனது தீர்ப்பில், "ஆசிய வர்த்தக வங்கியின் (ஏசிபி) நிறுவனர் குயென் டக் கீன் (50) நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர் நேர்மையாக நடந்து கொள்ளாத காரணத்தால் குற்றத்தின் தன்மைக் கேற்ப கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டை கீன் மறுத்தபோதிலும், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20.6 கோடி அபராதமும் விதிக் கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏசிபி உயர் அதிகாரிகள் 7 பேருக்கு 2 முதல் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏசிபி வங்கியின் முன்னாள் இயக்குநர் லி ஜுவான் ஹை-க்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஏசிபி வங்கியின் நிறுவனரும் வியட்நாமின் சில பெரிய நிதி நிறுவனங்களின் பங்குதாரருமான கீன் மற்றும் பிற வங்கியாளர்கள் சட்டவிரோதமாக பணப் பரிவர்த் தனை செய்ததால் ரூ.395 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in