Published : 18 Feb 2022 02:22 PM
Last Updated : 18 Feb 2022 02:22 PM

மாறும் சவுதி... ரயில் ஒட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

ரியாத்: சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து அரபு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், “கடந்த ஓர் ஆண்டாக அதிவேக ரயில்களை இயக்க விருப்பமுள்ள பெண்களுக்கு சவுதி பயிற்சி அளித்தது. இதன் அடிப்படையில் தற்போது பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெண் ரயில் ஓட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். பழமைவாதங்களும், கட்டுப்பாடுகளும் நிறைந்த சவுதியில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை விளம்பரப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன. ஆனால், சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவர் சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார்.

அதுமட்டுமல்லாமல், பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் கடந்த 2018-ஆம் ஆண்டு சவுதி அனுமதி அளித்தது. சவுதியின் 87-வது தேசிய தினத்தையொட்டி பெண்கள் முதல்முதலாக மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் ஆயுதப் படையில் சேரவும் அந்நாடு அனுமதி அளித்தது. தொடர்ந்து நாட்டின் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கை அதிகரிக்க சவுதி அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

சவுதியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து சீர்திருத்தங்கள் நடந்து வருவதை அந்நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x