

பிரேசிலில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அரசு ஊடகம் தரப்பில், “பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேரத்தில் 25.8 செ.மீ மழை பதிவாகியது. கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக பெய்த மழை, இந்த மூன்று மணி நேரத்தில் பெய்துவிட்டது.
இந்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்திற்கு இதுவரை 58 பேர் பலியாகினர். 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினர், ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக பிரேசிலில் பிரபல பெட்ரோபோலிஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பிப்ரவரி மாதம் முழுவதுமே பிரேசிலில் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பிரேசில் அரசு இறங்கியுள்ளது.