அயல்நாட்டுக் கொள்கைகள் பற்றி அறியாத டிரம்ப் அதிபர் ஆகலாமா? - ஒபாமா கேள்வி

அயல்நாட்டுக் கொள்கைகள் பற்றி அறியாத டிரம்ப் அதிபர் ஆகலாமா? - ஒபாமா கேள்வி
Updated on
1 min read

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்டு டிரம்பின் அயல்நாட்டுக் கொள்கைகள் குறித்த நம்பகங்களை அதிபர் ஒபாமா கடுமையாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த அணுப்பாதுகாப்பு மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, “அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்கும் அந்த நபருக்கு (டிரம்ப்) அயல்நாட்டுக் கொள்கை அல்லது அணுக்கொள்கை, அல்லது கொரியா, அல்லது உலகத்தைப் பற்றியே கூட எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.

நான் ஏற்கெனவே கூறியது போல் அமெரிக்க தேர்தல்களை உலக நாடுகள் ஆர்வத்துடன் பின் தொடர்ந்து வருகின்றன, நாம் என்ன செய்கிறோம் என்பது பிற உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

சில நாடுகளில் தங்கள் அரசியலை விழாக் கொண்டாட்டமாகக் காண்கின்றனர், ஆனால் அத்தகைய நாடுகள் கூட அமெரிக்காவிடமிருந்து தெளிவையும் நிதானத்தையும் எதிர்பார்க்கின்றது.

அமெரிக்க அதிபருக்கு உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியும் என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர் எனவே அவர் வகுக்கும் அயல்நாட்டுக் கொள்கைகள் அமெரிக்க பாதுகாப்பு, வளமை ஆகியவற்றுடன் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளமை ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பு உள்ளது.

ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கைகள் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் செய்த தியாகங்களின் மீது கட்டமைக்கப்பட்டது.

எனவே இத்தகைய முக்கியத்துவங்களை அறியாத ஒருவர் அதிபர் பதவிக்கு விரும்பத் தகாதவர்.

இவ்வாறு கூறினார் ஒபாமா.

டோனல்டு டிரம்ப், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவை நம்பியிருக்காமல் தங்களுக்கான அணுத்திறன்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று பேசியதை சுட்டிக்காட்டியே அதிபர் ஒபாமா இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in