

எஃப்-16 ரக போர்விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். இந்த விமானங் களை தீவிரவாதத்துக்கு எதிராக பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என அமெரிக்க எம்.பி.க்கள் கவலை தெரிவித்தள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் சார்பில் நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ் தான் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், எம்.பி. மேட் சாலமன் பேசும்போது, “இந்த சமயத்தில் 8 எஃப் 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்க வேண்டுமா என்பதுதான் நான் உட்பட பல எம்.பி.க்களின் கேள்வியாக உள்ளது. இந்திய, பாகிஸ்தான் உறவில் பதற்றம் தொடர்கிறது. எனவே, எஃப்-16 ரக போர் விமானங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன் படுத்தப்படுமா அல்லது இந்தியா வுக்கு எதிராகவோ மற்ற நாடு களுக்கு எதிராகவோ பயன்படுத்தப் படுமா எனக் கேள்வி எழுகிறது” என்றார்.
அவருக்கு ஆதரவாக பல எம்.பிக்கள் குரல் எழுப்பினர்.
மற்றொரு எம்.பி. பிராட் ஷேர்மன் பேசும்போது, “எந்தவகையிலான ராணுவ உதவி பாகிஸ்தானுக்கு அளிக்கப்படுகிறது என்பதில் நாங்கள் கவலை கொள்கிறோம். எஃப்-16 போர் விமானங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன் படுத்தப்படுவதற்கா அல்லது இந்தியாவுக்கு நிகராக பாகிஸ் தானின் ராணுவத்தைப் பலப்படுத் தவா எனக் கேள்வி எழுகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக பயன் படுத்த இந்த போர்க்கருவியை அளிக்க வேண்டுமே தவிர, இந்தியா வுடன் போர் செய்ய அல்ல” என்றார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கா வின் சிறப்பு பிரதிநிதி ரிச்சர்ட் ஓல்சன் இக்கூட்டத்தில் பங்கேற்றார். அவரிடம், “இந்த சமயத்தில் ரூ. 4,650 கோடி மதிப்பில் 8 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும். இது எவ்வகையில் அமெரிக்காவுக்கு நலன் பயக்கும் என்பதையும் கூற வேண்டும்” என சாலமன் கேட்டுக் கொண்டார்.
மேலும், “தீவிரவாதத்தை எதிர்ப்பதற்காக பாகிஸ்தானுக்கு ஏராளமான ஆயுதங்களை நாம் பல ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு சுமார் ரூ.1.16 லட்சம் கோடி மதிப்பில் ஆயுதங்களை வழங்கியும், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மிகத் தாராளமாக செயல்பட்டு வருகின்றனர்” எனக் குற்றம்சாட்டினார் சாலமன்.
துணைக் குழு தலைவர் இலியானா ராஸ் லெடினனும் பாகிஸ்தானுக்கு போர் விமா னங்கள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.