Published : 11 Feb 2022 08:36 AM
Last Updated : 11 Feb 2022 08:36 AM

'உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்': அமெரிக்கர்களுக்கு பைடன் அறிவுறுத்தல்

வாஷிங்டன்: போர்மேகச் சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை என்பிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அதிபர் பைடன், "அமெரிக்கர்கள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டிய தருணம் இது. நாங்கள் உலகின் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்கொண்டுள்ளோம். இது மிகவும் வித்தியாசமான சூழல். நிலைமை விரைவில் கட்டுப்பாடின்றி செல்லலாம்" என்று கூறியுள்ளார்.

அதிபரின் இந்த அறிவிப்பால் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

உக்ரைன் மீது ஏன் இந்த வெறுப்பு? சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

இந்த நிலையில் 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்றே புதின் தொடர்ந்து முழங்கி வருகிறார். எந்த நேரம் போர் மூண்டுவிடலாம் என்ற சூழலில் உள்ள ரஷ்யா, உக்ரைன் விவகாரம் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்பட்டு வரும் நிகழ்வாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x