Published : 09 Feb 2022 09:34 AM
Last Updated : 09 Feb 2022 09:34 AM

ஒமைக்ரான் பரவலுக்குப் பின் 5 லட்சம் உயிரிழப்புகள் பதிவு: உலக சுகாதார நிறுவனம் கவலை

ஜெனீவா: ஒமைக்ரான் பரவலுக்குப் பின் உலகம் முழுவதும் அரை மில்லியன் அதாவது 5 லட்சம் உயிர்ப்பலி பதிவாகியுள்ளது. நிலைமை இப்படியிருக்க ஒமைக்ரானை மிதமானது என்று எப்படிக் கூற முடியும் என கவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

அந்த அமைப்பின், பெருந்தொற்று இறப்புகள் தொடர்பான மேலாளர் அப்டி முகமது கூறுகையில், "கடந்த நவம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய ஒமைக்ரான் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இது வெகுநிச்சயமாக டெல்டாவை விட அதிக பரவல். ஒமைக்ரானால் தீவிர நோய் பாதிப்பு இல்லை என்ற கருத்து நிலவும் சூழலில் இந்தப் புள்ளிவிவரத்தையும் கவனிக்க வேண்டும். இத்தனை தடுப்பூசிகள் இருந்தும் குறுகிய காலத்தில் 5 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. இதை நிறைய பேர் கவனிக்கத் தவறியுள்ளனர்" என்றார்.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், " நமக்குக் கிடைத்துள்ள ஒமைக்ரான் தொடர்பான எண்ணிக்கைகள் வியக்கவைக்கிறது. ஆனால் அதே வேளையில் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இதற்கு முந்தைய அலைகளை எல்லாம் எண்ணிக்கை அளவில் ஒமைக்ரான் அலை தட்டையாக்கிவிட்டது.
நாம் இன்னும் பெருந்தொற்றுக்கு இடையில் தான் இருக்கிறோம். நாம் அது முடியும் தருணத்தை நெருங்கவுள்ளோம். இன்னும் நிறைய நாடுகளில் இப்போது ஒமைக்ரான் உச்ச அலையில் இருக்கிறது. கரோனா உயிரிழப்புகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகமாக இருப்பது வருத்தமளிக்கிறது.

ஒமைக்ரானின் BA.2 உருமாற்றம் தான் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

அதேபோல் ஒரே நபருக்கு ஒரே வேளையில் BA.1, BA.2 ஆகிய திரிபுகளால் பாதிப்பு ஏற்படுகிறதா என்ற ஆய்வுகள் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து, இதுவரை 5 கோடியே 75 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x