2 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த ஆஸ்திரேலியா

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த ஆஸ்திரேலியா
Updated on
1 min read

கான்பரா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. இதற்காக ராணுவத்தையும் அரசு பயன்படுத்தியது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி போடாத பயணிகளுக்கு மருத்துவக் காரணம் எதாவது இருந்தால், அவர்கள் விலக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும்; அதில் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர் என்று ஆஸ்திரேலிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளதால் உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 80% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 39 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in