

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப் பட்டுள்ள பழமைவாத ‘ஜமாத் இ இஸ்லாமி’யின் தலைவர் மீதான தீர்ப்பை வங்கதேச நீதிமன்றம் திங்கிள்கிழமை தள்ளி வைத்தது.
வங்கதேச விடுதலைப் போரின் போது கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும், பெங்காலி அறிஞர்களை படுகொலை செய்ததாகவும் ஜமாத் இ இஸ்லாமியின் தலைவர் மோதி யுர் ரஹ்மான் நிஸாமி (69) மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் அவருக்கு மரண தண்டனை விதிக் கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இவ்வழக்கில் செவ்வாய்க் கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. இதையொட்டி தலை நகர் டாக்கா மற்றும் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நிஸாமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவ ரால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது என சிறை நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.
தீர்ப்பு வழங்கப்படும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்பதால், இது குறித்து இருதரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதி பின்னர் தீர்ப்பு வழங்குவதை ஒத்தி வைத்தார்.
இதனிடையே நிஸாமிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், அவரை மருத்துவமனையில் அனு மதிக்க உள்ளதாகவும் சிறை கண் காணிப்பாளர். ஃபர்மன் அலி கூறினார். இதனிடையே விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிரான அமைப் பினர் நூற்றுக்கணக்கானோர் நீதி மன்றம் முன் திரண்டிருந்தனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால் இவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். “இதன் பின்னணியில் சதி உள்ளது. இதை எதிர்த்துப் போராடுவோம்” என்று அவர்கள் கூறினர்.
வங்கதேச விடுதலைப் போரின் போது, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் கிழக்கு வங்காள கூட்டாளிகளால் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
நிஸாமி அப்போது, ஜமாத் இ இஸ்லாமியின் மாணவர் அணிக் கான கிழக்கு பாகிஸ்தான் தலைவ ராக இருந்தார். இவர் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து கொடூர குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.
1971 டிசம்பரில் பேரா உபாஸிலா என்ற இடத்தில் 70 பேரை கொன் றது, 72 வீடுகளை சேதப்படுத்தியது, டெர்மா, பவ்ஷியா ஆகிய கிரா மங்களில் 450 பேரை கொலை செய்தது, சாந்தியா உபாசிலா என்ற இடத்தில் இந்து ஆலயத்தின் முன் பலரை கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் நிஸாமி மீது உள்ளன.
நிஸாமி மட்டுமன்றி ஜமாத் இ இஸ்லாமியின் அனைத்து முன்னிலை தலைவர்கள் மீதும் போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. போர்க் குற்றங் களை விசாரிப்பதற்காக அவாமி லீக் அரசால் அமைக்கப்பட்ட 2 தனி நீதிமன்றங்களும் 2011-ல் விசாரணையை தொடங்கிய பிறகு, இதுவரை 8 பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளன.