தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Updated on
1 min read

வாஷிங்டன்: "தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்" என அமெரிக்க ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத் தெரிவித்துள்ளார்.

உலகளவில் மிக அதிகமான கரோனா நோயாளிகளையும், கரோனா உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது அமெரிக்கா. ஆனால், அங்கு இன்னும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கலகம் செய்து கொண்டிருக்கின்றனர். ராணுவத்திலும் ஒரு குறிப்பிட்ட சாரார் தடுப்பூசி போடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத், "ராணுவத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களால் படைகளின் மற்ற வீரர்களுக்கு அச்சுறுத்தல். படைகளை எப்போதும் தயார்நிலையில் வைத்திருப்பதில் இவர்களால் ஆபத்து ஏற்படக் கூடும். ஆகையால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 3000-க்கும் மேற்பட்ட வீரர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள். 2021 கணக்கெடுப்பின்படி அமெரிக்க ராணுவத்தில் மொத்தமாக 4 லட்சத்துக்கு 82,000 வீரர்கள் உள்ளனர்.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதியன்று ராணுவத்தைச் சேர்ந்த 2 பட்டாலியன் கமாண்டர்கள் உட்பட 6 உயரதிகாரிகள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்த மறுத்ததால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதவிர 3,073 வீரர்களுக்கு ராணுவம் கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2021 அக்டோபர் மத்தியிலேயே அமெரிக்கா, ராணுவ வீரர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு அமெரிக்க கடற்படை வெளியிட்ட ஊடக அறிக்கையில், இப்போது வரை 8000 வீரர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். 118 பேரை பணிநீக்கம் செய்துள்ளோம்" என்றார்.

அமெரிக்க முப்படை வீரர்களில் 97% சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மீதமுள்ளோரையும் தடுப்பூசி செலுத்தவைக்க அரசு போராடி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in