2 பேருக்குக் கரோனா: டோங்காவில் ஊரடங்கு அமல்; எரிமலை சீற்றத்திலிருந்து விடுபடுவதற்குள் புதிய சிக்கல்

2 பேருக்குக் கரோனா: டோங்காவில் ஊரடங்கு அமல்; எரிமலை சீற்றத்திலிருந்து விடுபடுவதற்குள் புதிய சிக்கல்
Updated on
2 min read

நுகு அலோபா: பல மாதங்களுக்குப் பின் புதிதாக இரண்டு பேருக்குக் கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று ஒரு நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தீவு தேசமான டோங்கா.

ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான தீவுக் கூட்டம்தான் டோங்கா. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் கடல் தேசமாகப் போற்றப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. இந்த எரிமலைகளில் சில அடிக்கடி வெடிக்கும்.

இந்நிலையில், ஒரு தீவுக்கு அருகே கடல் பகுதியில் உள்ள எரிமலை ஜனவரி 14 ஆம் தேதி அதிகாலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், அப்பகுதியில் சுனாமி அலை உருவானது. இந்த அலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவின, தலைநகர் நுகு அலோபா நகரின் பெரும்பாலான பகுதிகளில் சுனாமி அலைகள் புகுந்தன.

சுனாமி அலைக்கு ஒரு வெளி நாட்டவர் உட்பட மூன்று பேர் பலியாகினர். எரிமலை சாம்பல், சுனாமிப் பேரலை என இரு பெரும் சவால்களுடன் மீள முயற்சித்து வருகிறது டோங்கா.

கடந்த 2020ல் இருந்தே வெளிநாடுகளுடனான எல்லையில் டோங்கா மூடிவைத்திருந்தது. ஆனாலும் கடந்த அக்டோபரில் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டார். கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட டோங்காவில் கடந்த திங்கள்கிழமை வரை ஒரே ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டது என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் சியோஸி சொவலேனி கூறுகையில், ''தலைநகரில் இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் துறைமுகத்தில் பணியாற்றி வந்தவர்கள். டோங்காவுக்கு சமீப நாட்களாகவே வெளிநாடுகளில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றன. இதனால் துறைமுகம் பரபரப்பாக உள்ளது. அங்கு பலரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கு டொற்று உறுதியானதால் டோங்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது'' என்றார்.

டோங்கா மக்கள் தொகையில் 85% பேர் இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தொற்று உறுதியான இருவரும் கூட இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எனத் தெரிகிறது. அவர்களுக்கு அறிகுறிகளற்ற தொற்றே இருக்கிறது என்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இன்று முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்காவில் குடிநீர் பிரச்சினை மிகப்பெரிய சவாலாக உருவாகியுள்ளது. அதேபோல் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் தொலைதொடர்பு கேபிள்கள் சேதமடைந்து அந்நாட்டில் தொலைத்தொடர்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது சரியாக இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேலாகும் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in