

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றைப்பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்ததாக முன்னணி செய்தி சானலான ஜியோ நியூஸ் சானலுக்கு பாகிஸ்தான் தடை விதித்தது.
பாகிஸ்தான் எலக்ட்ரானிக் ஊடக ஆணையம் 15 நாட்களுக்கு ஜியோ நியூஸ் சானலின் உரிமத்தை ரத்து செய்தது, மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது.
இந்தச் செய்தியையும் அந்த நியூஸ் சானல் ஒளிபரப்பு செய்தது. அதாவது ஜியோ நியூஸ் லோகோவை சங்கிலியில் கட்டிப்போட்டது போன்ற கிராபிக்குடன் ஒளிபரப்பியது. பிறகு சிக்னல் தடை செய்யப்பட்டது. பார்வையாளர்களுக்கு அதன் பிறகு வெறும் திரையே தெரிந்தது.
ஏற்கனவே இதே செய்தி சானலைச் சேர்ந்த ஹமித் மிர் என்பவர் மீது ஏப்ரல் 19ஆம் தேதி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. வயிறு மற்றும் கால்களில் 6 குண்டுகள் பாய்ந்தது. கராச்சியில் இந்தப் பயங்கரம் நடந்தது.
அதன் பிறகு இப்போது 15 நாட்கள் ஒளிபரப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ. உள்ளது என்ற செய்தியை ஜியோ செய்தி மீண்டும் மீண்டும் காட்டியதால் தடை விதிக்கப்பட்டதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தானில் எதிர்ப்பு எழுந்துள்ளது.