Published : 31 Jan 2022 08:15 AM
Last Updated : 31 Jan 2022 08:15 AM

ஆப்கனில் வறுமை, பட்டினியால் சிறுநீரகங்களை விற்கும் மக்கள்: தடையை விலக்க உலக வங்கிக்கு கோரிக்கை

ஹெரத்: ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங் களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டி ருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்தன. இதனால் ஆப்கானிஸ்தானில் வேலையின்மை, வறுமை, பசி பட்டினி அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரத் மாகாண மக்கள் கடும் வறுமை, பட்டினியால் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக தங்கள் சிறுநீரகங்களை விற்கும் அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிக அளவில் சிறுநீரகங்களை விற்பதாக கூறப்படுகிறது.

ஆப்கன் சட்டப்படி, உடல் உறுப்புகளை விற்பனை செய்வது சட்டவிரோதம். ஆனாலும், உயிர் வாழ்வதற்காக சிறுநீரகங்களை விற்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என மக்கள் கூறுகின்றனர். இதனிடையே, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்று வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கன் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, முடக்கி வைக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்த உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஆப்கன் அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x