

ஜப்பானில் தொடர் நிலநடுக்கங்க ளால் அந்த நாட்டு பங்குச் சந்தை 3 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தென் மேற்கு தீவான கையுஷுவில் கடந்த வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவானது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் கடந்த சனிக்கிழமை 7.3 அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 500-க்கும் மேற்பட்ட தடவை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். லட்சக் கணக்கானோர் இடம்பெயர்ந் துள்ளனர்.
தொடர் நிலநடுக்கங்களால் அந்தப் பகுதிகளில் செயல்பட்ட டொயட்டோ, சோனி, ஹோண்டா நிறுவனங்களின் ஆலைகள் மூடப் பட்டுள்ளன. இதனால் ஜப்பான் பங்குச்சந்தை நேற்று 3.4 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
பெரும்பாலான பாலங்கள், சாலைகள் மோசமாக சேதமடைந் திருப்பதால் சாலை மார்க்கமாக உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்கின் றனர். கூட்டம் அதிகமாக இருந்தா லும் பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருந்து பொருட்களை வாங்குகின்றனர்.
பல்வேறு இடங்களில் ரேஷன் அடிப்படையில் உணவுப்பொருட் கள் விநியோகம் செய்யப்படு கின்றன. பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு அரசுத் தரப்பில் நாள் தோறும் 9 லட்சம் உணவுப் பொட்டலங்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. நிலைமை சீரடைய பல மாதங் களாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.