

இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில் இதுகுறித்து ஆராய நிபுணர் குழுவினர் வரும் செப்டம்பரில் இந்தியாவுக்கு வருகின்றனர்.
இந்திய மாம்பழங்களில் பூச்சிகள் இருப்பதாகக் கூறி அதன் இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் கடந்த மே 1-ம் தேதிமுதல் தடை விதித்தது. இந்த தடை உத்தரவு 2015 டிசம்பர் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். இதனால் இந்திய மாம்பழ ஏற்றுமதி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கெய்த் வாஸ் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடையை நீக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அண்மையில் பிரசெல்ஸ் சென்றிருந்த அவர், ஐரோப்பிய யூனியனின் வேளாண் துறை ஆணையர் டாசியன் சியலோஸை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து கெய்த் வாஸ் லண்டனில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2013-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய மாம்பழங்களின் தரம் தொடர்பாக 37 புகார்களும் பாகிஸ்தான் மாம்பழங்கள் குறித்து 136 புகார்களும் டொமினிகன் குடியரசு மாம்பழங்கள் குறித்து 46 புகார்களும் எழுந்துள்ளன.
இதில் இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது விசித்திரமாக உள்ளது. இந்தியாவில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இந்திய அரசுடன் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியனின் நிபுணர் குழுவினர் வரும் செப்டம்பரில் இந்தியா செல்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.