

டோக்யோ: ஜப்பான் நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதிக்கு அருகில் இன்று (டிச. 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.6 எனப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலைகள் 10 அடி உயரம் வரை எழ வாய்ப்புள்ளது என்றும், மக்கள் அனைவரும் கடலோரப் பகுதிகளில் இருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி 53.1 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜப்பானின் ஆமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரைப் பகுதிகளுக்கு அப்பால் தாக்கிய இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு அவசர பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் உயிருக்கு முதலிடம் கொடுத்து, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்றும் ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.