

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என பெண்கள் நாள்தோறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில், பெண்களுக்கான சம உரிமையை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தவர் தமனா சர்யாபி. இவர் கடந்த வாரம் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமத்துவத்தை வலியுறுத்தி தலிபான்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் பல பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தமனா தலிபான்களால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்களாக தமனாவை காணவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமனாவின் வீட்டுக்குள் தலிபான்கள் நுழையும் காட்சியைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம்தான் தலிபான்களால் தமனா கைது செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிய வந்திருக்கிறது.
போராட்டத்தில் கலந்துகொண்ட மற்ற சில பெண்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை தலிபான்கள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர்,சுஹைல் ஷாஹின் கூறும்போது, “தலிபான்கள் அப்பெண்களை கைது செய்திருந்தால் நிச்சயம் அதனை ஒப்புக்கொள்வார்கள். கைது செய்யப்பட்டது உண்மையானால் அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லட்டும். இது சட்ட ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினை” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது முதலாக, அந்நாட்டில் பழங்கால இஸ்லாமிய சட்டத்தை (ஷரியா) நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆண்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும்; பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது; திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் இசைக் கருவிகள் இசைக்கப்படக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.