

யுரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில், தனது இணையைப் பிரிந்த சோகத்திலிருந்த காண்டாமிருகம், கழுதையின் நட்பால் சோகத்திலிருந்து மீண்டு வருகிறது.
திப்லிஸ் விலங்கியல் பூங்காவில் இமானுலா என்ற பெண் காண்டாமிருகம் உள்ளது. இதன் இணை காண்டாமிருகம் அண்மையில் இறந்து விட்டது. இதையடுத்து கடும் மனஅழுத்தத்துடன் காணப்பட்ட இமானுலா விலங்கியல் பூங்கா பராமரிப்பாளர்களிடமும் ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டது.
இதையடுத்து இக்காண்டாமிருகத்துக்கு ஏதேனும் ஒரு விலங்கை நண்பனாக அறிமுகம் செய்தால், அது மனநெருக்கடியிலிருந்து மீளும் என பராமரிப்பாளர்கள் கருதினர். இதைத் தொடர்ந்து வரிக்குதிரையை , இமானுலா இருந்த பகுதியில் விட்டனர். ஆனால் இம்முயற்சி பலனளிக்கவில்லை. இமானுலா தொடர்ந்து ஆக்ரோஷமாகவே காணப்பட்டதால், வரிக்குதிரை அங்கிருக்கப் பிடிக்காமல் ஓடி விட்டது. அடுத்து ஆடு ஒன்றை அனுப்பினர். அதுவும் பலனளிக்கவில்லை.
இறுதியில் கழுதையை அப்பகுதிக்குள் விட்டனர். இமானுலாவின் பிடிவாதத்தை கழுதை மெல்ல மெல்லக் கரைத்து விட்டது. இப்போது, கழுதையும் இமானுலாவும் ‘நண்பேன்டா’எனச் சுற்றித் திரிகின்றனவாம். இதனை, விலங்கியல் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் மிஸியா ஷாராஷிஸே உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விலங்கியல் பூங்காவில் எந்தவொரு விலங்கும் தனிமையில் வாடக்கூடாது என்பதற்காக, மற்றொரு விலங்கை நண்பராகச் சேர்த்து விடுவர். அண்மையில் தாய் சிங்கம் தன் குட்டியை தனியே பிரித்து விட்டது. அந்த சிங்கக் குட்டி தற்போது நாய் ஒன்றுடன் நட்பாக இருந்து வருகிறது.