

இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைத் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத் தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று சில முஸ்லிம் இளைஞர்களுக்கும், புத்த பிட்சுவின் கார் ஓட்டுநருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீவிர புத்தமதக் குழுவான ‘போது பாலசேனா’ என்ற அமைப்பு அலுத்தாமா, பெருவாலா ஆகிய பகுதி களில் ஊர்வலம் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் 4 பேர் கொல்லப் பட்டனர். பலர் காயமடைந் துள்ளனர். ஏராளமான முஸ்லிம் களின் வீடுகளும் நிறுவனங்களும் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன.
இது மேலும் பரவும் ஆபத்து உள்ளது என்றும், இதை உடனடியாக தடுத்துநிறுத் துவதுடன், கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் காரணமான வர்களைக் கைது செய்து, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் தலைவர் அனந்த பத்மநாபன் கூறியுள்ளார்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தால் இவ்வாறு ஏற்படும் என முஸ்லிம் சமுதாயத்தினர் கூறியும், அரசு அனுமதி அளித்ததால்தான் வன்முறையும் கலவரமும் வெடித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையில் மதச் சிறுபான் மையினருக்கு எதிராக தீவிர புத்தமதக் குழுவினரின் தாக்கு தல்கள் அதிகரித்து வருவதையும், முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டி ஐ.நா. மனித உரிமைக்கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த கவுன்சில் கூட்டத்தில், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.