ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்: 12க்கும் மேற்பட்டோர் பலி

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்: 12க்கும் மேற்பட்டோர் பலி
Updated on
1 min read

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 12க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் திங்கட்கிழமை ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த மூவரில் இருவர் இந்தியர்கள். ஒருவர் பாகிஸ்தானியர்.

அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனமான ADNOC-ஐக் குறிவைத்து இத்தாக்குதலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர்.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் சவுதி கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 12க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஆனால், 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹவுத்தி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அமீரகமோ இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்று விளக்கம் அளித்துள்ளது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in