Published : 17 Jan 2022 08:56 PM
Last Updated : 17 Jan 2022 08:56 PM

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று; இன்னும் சில ஆண்டுகளில் வாழத் தகுதியற்றதாக மாறும்: ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

குவைத் நகரின் மாலியா பேருந்து நிலையத்தில் நின்று பேருந்தைப் பிடிப்பது என்பது கோடைக் காலத்தில் மிகப் பெரிய சவால்.
ஏனெனில் அப்படி ஒரு வெயில் கொளுத்தும், போக்குவரத்தின் மையமான இந்த பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகளின் புகையும், நெரிசலும் காத்திருப்பை இன்னும் நரகமாக்கும். குடைக்குள் சிலரும், பேருந்து நிலைய நிழற்குடைக்குள் பலரும் தஞ்சம் புகுந்து கொள்வர்.

புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதுமே தட்பவெப்பம் அதிகரித்துள்ளது. இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது குவைத். புவியின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 54 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடந்த 76 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பமாக இது கருதப்பட்டது.

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் முதன்முறையாக 50 டிகிரி வெப்பநிலை எட்டப்பட்டது. இந்நிலையில் 2071 ஆம் ஆண்டு குவைத்தின் பல்வேறு நகரங்களிலும் தற்போது நிலவும் வெப்பநிலை 4.5 டிகிரி அளவுக்கு அதிகரிக்கக் கூடும் எனக் கூறுகிறது என்விரான்மன்ட் பப்ளிக் அதாரிட்டி என்ற அமைப்பு. இதனால் குவைத் நாட்டின் பெரும்பாலான பகுதிகளும் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாறும் என அந்நிறுவனம் கணிக்கிறது.

அரசியல் செயல்பாட்டின்மையே காரணம்: பிரேசில் தொடங்கி வங்கதேசம் வரை பல்வேறு நாடுகளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் உறுப்பு நாடுகளில் ஒன்றான வளமான, வெறும் 45 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட நாட்டால் ஏன் பசுமைகுடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் அதற்கு அந்நாட்டில் அரசியல் செயல்பாட்டின்மையே காரணம் எனக் கூறப்படுகிறது.

குவைத்தின் அண்டை நாடான சவுதி அரேபியா, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. 2060குள் ஜீரோ எமிஸன் என்ற நிலையை எட்டுவோம் என்று உறுதியெடுத்துள்ளது.

ஆனால், குவைத்தில் இதுபோன்ற அரசியல் ரீதியான எந்த நடவடிக்கையும் இல்லை என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அடுத்த இரண்டு ஐ.நா பருவநிலை மாநாடுகள் எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மத்திய கிழக்கு பிராந்திய அரசுகளும் தாங்களும் காலநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் கடல் மட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

கடைசியாக நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் 2035க்குள் 7.4% வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவோம் என குவைத் சூளுரைத்துள்ளது.

பணியைத் துறந்த இளைஞர்: குவைத் அரசின் மீது குற்றச்சாட்டுகள் குவியும் சூழலில், அந்நாட்டில் வங்கித் துறையில் பணியாற்றிய ஜஸீம் அல் அவாதி, தனது வேலையைத் துறந்துவிட்டு புவி வெப்பமயமாதல் பிரச்சினைகள் குறித்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. அவரது இலக்கு குவைத் மக்கள், பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்தி, கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே. இப்போதைக்கு குவைத்தில், குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

உயிரிழக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: வளரும் நாடுகளில் இருந்து குவைத்துக்கு வேலைக்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆண்டுதோறும் வெயில் காலத்தில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர். பொதுவாக வெயில் காலத்தில் உச்சிப் பொழுதில் வெளியே பார்க்கும் வேலைகளுக்கு தடை இருந்தாலும் கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதால் உயிரிழப்புகள் நேர்கின்றன. கடந்த ஆண்டு வெயில் காலத்தில், குவைத்தில் குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இருமடங்கு அதிகமாக இருந்தது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2040 தொடங்கி 2050 இடைப்பட்ட காலக்கட்டத்தில் தட்பவெப்பத்தால் குவைத்தின் நம்பகத்தன்மை மீது எதிர்மறை விளைவுகளே ஏற்படும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற பொருளாதார கணிப்பு அமைப்பு கூறுகிறது.

இதனால், குவைத் அரசு அரசியல் குழப்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, காலநிலை மாற்றத்தினைக் கட்டுப்படுத்துவதன் நிமித்தமாக தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

உறுதுணைக் கட்டுரை: https://www.bloomberg.com/asia

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x