Published : 17 Jan 2022 03:18 PM
Last Updated : 17 Jan 2022 03:18 PM

டோங்கா எரிமலை வெடிப்பு: சேதத்தை மதிப்பிட விமானம் அனுப்பும் நியூசிலாந்து

டோங்கா தீவின் கடல் பரப்பில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் சேதத்தை மதிப்பிட நியூசிலாந்து விமானம் அனுப்பவுள்ளது.

எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமியால் எந்தவித உயிர் சேதமும் இல்லையென்றாலும், 'குறிப்பிடத்தக்க பாதிப்பு' ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். மேலும் எரிமலை வெடிப்பு சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு கண்காணிப்பு விமானங்களை நியூசிலாந்து அனுப்பும் என்றும் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, "டோங்கா முழுவதும் 80,000 பேர் வரை எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, அங்கே உள்ள தீவுகளில் என்ன நடந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அக்கறை எங்களுக்கு உள்ளது.

தீவின் சில பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மொபைல் போன்கள் மெதுவாக மீண்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. என்றாலும் சில கடலோரப் பகுதிகளில் நிலைமை தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார் ஜெசிந்தா. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவும் கண்காணிப்பு விமானங்களை அனுப்பப்போவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான தீவுக் கூட்டம்தான் டோங்கா. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் கடல் தேசமாகப் போற்றப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. இந்த எரிமலைகளில் சில அடிக்கடி வெடிக்கும்.

இந்நிலையில், ஒரு தீவுக்கு அருகே கடல் பகுதியில் உள்ள எரிமலை கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், அப்பகுதியில் சுனாமி அலை உருவானது. இந்த அலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.

தலைநகர் நுகு அலோபா நகரின் பெரும்பாலான பகுதிகளில் சுனாமி அலைகள் புகுந்தன. சுமார் 3 அடி உயரத்தில் சுனாமிப் பேரலை தாக்கிய காட்சிகள் டோங்கா தலைநகர் நுகு அலோபாவில் பதிவாகியுள்ளன. பாகோநாகோ பகுதியில் 2 அடி உயர சுனாமி அலைகள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு டோங்கா தீவின் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்ததால் தீவில் உள்ள 1,05,000 குடியிருப்பாளர்களை முழுமையாக அணுக முடியவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்புக்கு முன்னதாகவே, கடந்த சில நாட்களாக எரிமலை வெடிப்பு சிறிய அளவில் நிகழ்ந்துள்ளது என்றும், இதனால் தீவின் சில பகுதிகளில் சல்பர் மற்றும் அம்மோனியா வாசனை வீசிவந்ததாக டோங்கா வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது என்றும் கூறப்படுகிறது.

எரிமலை வெடிப்பின் பாதிப்பை எடுத்துச் சொல்லும் செயற்கைக்கோள்கள் : டோங்கா எரிமலை வெடிப்பு ஏற்பட்டபோது, ​​என்ன நடந்தது என்பதைத் தெளிவாக விளக்கும் வகையில் செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

கொரியாவின் GK-2A, ஜப்பானின் ஹிமாவாரி-8 மற்றும் அமெரிக்காவின் GOES-17 போன்ற வானிலை செயற்கைக்கோள்கள் எடுத்த படங்கள் வெளியாகியுள்ளன. பூமியிலிருந்து 36,000 கி.மீ. (22,370 மைல்) உயரத்தில் இருக்கும் இந்த வானிலை செயற்கைக்கோள்கள் எடுத்த காட்சிகளில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட சில மணித்துளிகளில் வானம் சாம்பலால் மூடப்பட்டு, முழுவதுமாக சாம்பல் மேகம் போல் தெரிகிறது. இதேபோல், சென்டினல்-1ஏ என்ற செயற்கைக்கோள் எடுத்த காட்சியில் ​​பசிபிக் பெருங்கடலின் நீர்ப்பகுதி முற்றிலும் அழிந்து போனதுபோல் சாம்பலால் மூடப்பட்டது தெரிகிறது.

சான் பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட பிளானட் நிறுவனம், டோங்கா தீவில் எரிமலை வெடிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு ரேடார் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் , ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தையும் ஒப்பிட்டுள்ளது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் எரிமலை வெடிப்பின் கோரத்தைப் புரியவைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இங்கிலாந்தின் வானிலை மையம் வெளியிட்ட அதிர்வலை வரைபடங்கள், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி நிறுவனம் ஒன்றின் ஏயோலஸ் மிஷன் செயற்கைக்கோள் வெளிப்படுத்திய சமிக்ஞை படங்கள் ஆகியவை எரிமலை வெடிப்பின் தீவிரத்தை எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x