

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், ஈரானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஷியா யாத்ரீகர்கள் 23 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
ஈரானுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட ஷியா முஸ்லிம் யாத்ரீகர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை 10 பஸ்களில் பாகிஸ்தான் திரும்பிக்கொண்டிருந்தனர். ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள டஃப்டான் நகரில் ஒரு ஹோட்டல் முன்பு பஸ்களை நிறுத்தினர்.
யாத்ரீகர்கள் ஹோட்டலுக்குச் செல்வதற்காக பஸ்களில் இருந்து இறங்கி வரும்போது, அங்கு கும்பலாக வந்த தீவிரவாதிகள், யாத்ரீகர்களை நோக்கி கண் மூடித்தனமாக சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த கொடூர தாக்குதலில் 25 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலை யில் உள்ளனர்.
இதனிடையே, தீவிரவாதி களின் தாக்குதல் பற்றி அறிந்து, துணை ராணுவப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் கடும் சண்டைக்குப் பிறகு 6 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற னர். இந்தத் தாக்குதலுக்கு சன்னி பயங்கரவாத அமைப்பான ‘ஜெய்ஷ் – உல் – இஸ்லாம்’ பொறுப்பேற்றுள்ளது. இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக அறிமுகம் செய்துகொண்ட ஆசாம் தாரிக் என்ற நபர், குவெட்டாவில் உள்ள பத்திரிகை யாளர்களை தொடர்பு கொண்டு இதனை கூறினார்.
பலுசிஸ்தான் மாகாண உள்துறை செயலாளர் அக்பர் துராணி கூறுகையில், “முகமூடி அணிந்திருந்த தீவிரவாதிகள் பெருமளவு ஆயுதங்களுடன் வந்திருந்தனர். ஹோட்டலை அவர்கள் முற்றுகையிடத் தயாரானபோது, பாதுகாப்பு படையினர் அவர்களை இடைமறித்து தாக்கினர். சில மணி நேர மோதலுக்குப் பிறகு அவர்கள் கொல்லப் பட்டனர்” என்றார்.
பலுசிஸ்தானில் சில ஆண்டு களாக ஷியா யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு குவெட்டா நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஷியா முஸ்லிம்கள் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஜனவரியில் மஸ்துங் பகுதியில், ஈரானில் இருந்து திரும்பும் பஸ்ஸில் குண்டு வெடித்ததில் ஷியா யாத்ரீகர்கள் 22 பேர் இறந்தனர்.