

பாகிஸ்தானில், அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வரும் மதகுரு முகம்மது தெஹ்ரிக் உல் காத்ரி இஸ்லாமாபாத்துக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த விமானம் லாகூருக்கு திருப்பப்பட்டது.
அந்த விமானத்திலிருந்து இறங்க காத்ரி மறுத்து சிறிது நேரம் விமானத்திலேயே அமர்ந்திருந்தார். காத்ரியின் ஆதரவாளர்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.
கனடா மற்றும் பாகிஸ்தான் என இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள சூபி மதகுரு முகம்மது தெஹ்ரிக் உல் காத்ரி(63) பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் அரசியல் மற்றும் தேர்தல் சீரமைப்பை வலியுறுத்தி அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரியில் அவர் நடத்திய போராட்டம் அரசுக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது.
கனடாவிலிருந்து தெஹ்ரிக் உல் காத்ரி திங்கள்கிழமை பாகிஸ்தான் திரும்பினார். அவர் பயணித்த விமானம் இஸ்லாமாபாத் செல்ல வேண்டும். ஆனால், அவரின் ஆதரவாளர்கள் தலைநகரில் திரண்டிருந்ததால் பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானம் லாகூர் திருப்பப்பட்டது.
லாகூரில் தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளிவர மறுத்த காத்ரி, விமானம் இஸ்லாமாபாத்துக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், “நவாஸ் ஷெரீப் தலைமையிலான கொலைகார அரசை நான் நம்பவில்லை. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அரசு எனது ஆதரவாளர் களை லாகூரில் கொலை செய்துள் ளது. அரசுடன் நான் பேச்சு வார்த்தை நடத்த மாட்டேன். பாகிஸ்தான் ராணுவம் சொன்னால் மட்டுமே நான் கேட்பேன். எனது பாதுகாப்புக்கு பாகிஸ்தான் ராணுவமே பொறுப்பு. ராணுவ அதிகாரிகள் வந்து, அவர்களின் பாதுகாப்பில் என்னை அழைத்தால் மட்டுமே விமானத்திலிருந்து வெளியேறுவேன்” என அவர் தெரிவித்தார்.
பின்னர் பஞ்சாப் ஆளுநர் சவுத்ரி முகம்மது சர்வார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து காத்ரி வெளியே வந்தார். பின் மாடல் டவுன் பகுதியிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றார்.
முன்னதாக, ராணுவ அதிகாரி களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. லாகூர் விமான நிலையத்தில் காத்ரியின் ஆதரவா ளர்கள் ஏராளமானவர்கள் திரண்டு விட்டனர். இதனிடையே, லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் காத்ரியின் ஆதரவாளர்களுக்கும் போலீஸா ருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இஸ்லாமாபாத்தில் நடந்த மோதலில் கல்வீசித் தாக்கப் பட்டதில் 70-க்கும் மேற்பட்ட போலீஸாரும், 40-க்கும் மேற்பட்ட காத்ரி ஆதரவாளர்களும் காயமடைந்தனர். கண்ணீர்ப்புகை குண்டு மற்றும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.