

பிரிட்டன் வாழ் இந்தியரும் தொழிலதிபருமான ஸ்வராஜ் பாலுக்கு, ‘குளோபல் ஸ்கில் ட்ரீ கூட்டமைப்பு’ சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பிரிட்டன்- இந்தியா கல்வி உடன்படிக்கைகள் சார்ந்து அவர் ஆற்றிய பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
‘குளோபல் ஸ்கில் ட்ரீ கூட்டமைப்பு’ இந்தியாவைச் சேர்ந்த கல்விசார் ஆலோசனைக் குழுமம் ஆகும். மேடம் டுஸ்ஸாட் மெழுகு அருங்காட்சியகத்தில் விருது வழங்கும் விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
விழாவில் அவர் பேசுகையில், “நமது சொந்த சமூகத்தால் நாம் அங்கீகரிக்கப்படுவது மிகவும் பெருமைக்குரியது. கல்வித் துறையில் உலகின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும். உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இந்தியாவுக்குத் தேவை. இந்தியாவில் எந்த அரசாங் கம் அமைந்தாலும் அதன் இலக்கு களில் முதலிடம் கல்வித்துறையாக இருக்க வேண்டும். இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசாங்கம் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளது. அவர்கள் அதனைச் செய்து முடிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
கேபரோ குழுமங்களின் தலைவரான ஸ்வராஜ்பால், வோல்வர்ஹாம்ப்டன் மற்றும் வெஸ்மின்ஸ்டர் ஆகிய இரு பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வராஜ் பாலின் உடன் பிறந்தாரின் மகளும், அபீஜே ஸ்த்யா பால் கல்விக்குழுமங்க ளின் (இந்தியா) தலைவருமான சுஷ்மா பெர்லியாவுக்கும் விருது வழங்கப்பட்டது.
மேலும், பிரிட்டன் வாழ் இந்திய வழக்கறிஞர் சரோஸ் ஸாய் வாலா, சுதந்திர ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லார்டு நவவீத் தோலாகியா, வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் ரிச்சி நந்தா ஆகியோருக்கும் அவர்கள் துறையில் செய்த பங்களிப்பைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குளோபல் ஸ்கில் ட்ரீ கூட்டமைப்பு நிறுவனர் சேகர் பட்டாச்சார்ஜி உள்பட பலர் பங்கேற்றனர்.