

லண்டன்: உங்களுக்கு ஜலதோஷமா, மூக்கடைப்பா..(common cold)? அப்படியென்றால் கரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கலாம்! இது ஆச்சர்யமளிக்கும் அறிவிப்பாக இருக்கலாம்.
ஆனால் லண்டனின் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சாதாரண ஜலதோஷம் பிடித்திருக்கும் போது T செல்கள் அதிகமாக உருவாகும் அவை கரோனாவுக்கு எதிரான இயற்கையான அரணாக இருக்கும் எனக் கூறுகின்றனர் இந்த ஆய்வு முடிவை எழுதியவர்கள்.
கரோனா எதிர்ப்பாற்றல் பற்றி புரிந்து கொள்வது எத்தனையோ ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் கூட சற்று கடினமானதாகவே இருக்கிறது. தடுப்பூசியால் உருவாகும் எதிர்ப்பாற்றல் 6 மாதங்களில் குறைந்துவிடும் என்று கூறப்படும் நிலையில் ஜலதோஷத்தால் உருவாகும் T-cells கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி 2020 செப்டம்பரில் தொடங்கியது. இதற்காக லண்டனில் 52 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்தக் குடும்பங்களில் சளி பிடித்தோருக்கு, கரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் வந்த பின்னர் கோவிட் பாதிப்பு ஏற்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
இவர்களில் 26 பேருக்கு தொற்று ஏற்படவில்லை. அவர்களுக்கு T-cells அதிகமாக இருந்தன.
இதன் அடிப்படையில், ஏற்கெனவே ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட நபரில் இருக்கும் T-cells, கரோனா தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு தரும் என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் ரியா குந்து கூறினார். ஆனால் இந்த பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறவில்லை.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. SARS-CoV-2 வில் உள்ள புரதங்களை T-cells தாக்குவதால் இது தடுப்பூசி தயாரிப்பாளர்களின் கவனத்திற்கு வரும் என்றார்.
தற்போதுள்ள கரோனா தடுப்பூசிகள் வைரஸின் ஸ்பைக் புரதங்களைக் குறிவைக்கின்றன. ஏனெனில் இந்த முள் புரதங்கள் தான் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. அப்படியான உருமாற்றத்தினால் தான் ஒமைக்ரான் வந்துள்ளது. அதேவேளையில் T-cells உள்ளார்ந்த புரதங்களைக் குறிவைக்கின்றன. இதனால் அங்கே உருமாற்றம் நிகழ்வது குறைவு என ஆராய்ச்சிக் கட்டுரையின் சக எழுத்தாளர் பேராசிரியர் அஜித் லால்வானி தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் வரும் புதிய தடுப்பூசிகள், T-cells போன்று செயல்பட்டு தற்போது உள்ள திரிபுகள் மட்டுமல்லாமல் இனி வரக்கூடிய திரிபுகளையும் தடுக்க வல்லதாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.