Published : 08 Jan 2022 12:53 PM
Last Updated : 08 Jan 2022 12:53 PM

ராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படை: ஐஎஸ் அச்சுறுத்தலால் தலிபான் முடிவு

ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் ஓர் அங்கமாக தற்கொலைப் படையை இணைக்க தலிபான் அரசு முடிவெடுத்துள்ளது. ஐ.எஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின. ஆகஸ்ட் மத்தியில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தலிபான் ஆட்சி அமைத்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நிர்வாக ரீதியாகவும் பல மாற்றங்களை தலிபான்கள் செய்துவருகின்றனர்.

அந்த வகையில், ஆப்கன் ராணுவ நிர்வாகத்தில் தற்போது முக்கிய முடிவை தலிபான் அரசு எடுத்துள்ளது. அதன்படி, தற்கொலை படையினரை தங்கள் ராணுவத்தின் ஓர் அங்கமாக சேர்க்க தலிபான்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆப்கான் முழுவதும் தனித் தனி குழுக்களாக இருக்கும் தற்கொலைப் படையினரை ஒருங்கிணைத்து அவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என தலிபான் அறிவித்துள்ளது.

தலிபான் செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமீ என்பவர் இந்த தகவலை உறுதிப்படுத்தி பேசுகையில், ''ஆப்கன் முழுவதும் பிரிந்து கிடக்கும் தற்கொலைப் படை வீரர்களை ஒருங்கிணைந்து ராணுவப் பிரிவின் கீழ் ஒரே குழுவாக செயல்பட திட்டமிட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த வலுவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தை கட்டமைக்கும் பணியில் இருக்கிறோம். நாட்டின் நலனுக்காக தியாகம் செய்யும் தற்கொலைப் படை வீரர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்கி, அவர்களுக்கு மிகவும் நவீன பயிற்சிகள் கொடுத்து சிறப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் தற்கொலை படையை கையிலெடுக்க காரணம், ஐ.எஸ் அமைப்பு. சில மாதங்கள் முன் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து அவர்களுக்கு ஐ.எஸ் அமைப்பு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஐ.எஸ் அமைப்பை சமாளிக்க தற்கொலை படையினரே சரியான தேர்வு என தலிபான் அரசு நம்புகிறது. ஆப்கானிஸ்தானை கைப்பற்ற நடந்த தலிபான்களின் 20 ஆண்டுகால போராட்டத்தில் அவர்களுக்கு பெரும் உதவிகரமாக இருந்தது தற்கொலைப் படைகளே. அவர்களை முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தியே, அமெரிக்க ராணுவம், ஆப்கன் ராணுவத்தை தலிபான்கள் சமாளித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றி, அதிகாரத்தை தலிபான்கள் பலப்படுத்த முயன்றபோது ஐ.எஸ் அமைப்பு ஐந்து பெரிய தாக்குதல்களை நடத்தி குடைச்சல் கொடுத்தது. அப்போது ஐ.எஸ் அமைப்புக்கு கைகொடுத்தது தற்கொலைப் படைகள்தான். அவர்கள் மூலமாக அந்த ஐந்து பெரிய தாக்குதல்களையும் அரங்கேற்றியது. எனவே இப்போது அதே தற்கொலைப் படைகள் மூலமாக ஐ.எஸ் அமைப்பை சமாளிக்க தலிபான்கள் முடிவெடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x