Published : 07 Jan 2022 05:37 PM
Last Updated : 07 Jan 2022 05:37 PM

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி: பிரதமர் பதவி விலகல் - கஜகஸ்தான் பற்றியெரிவதன் பின்னணி

அலமாட்டி: கஜகஸ்தானில் மக்கள் அன்றாடம் வாகனங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருள், சமையல் கேஸ் விலை உயர்த்தப்பட்டதற்கு பெரிய அளவில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. மக்கள் கிளர்ச்சியைத் தாங்காமல் பிரதமர் பதவி விலகினார். போராட்டத்தைச் சமாளிக்க கஜகஸ்தான் அதிபர், ரஷ்யாவின் உதவியை நாடியதால் ரஷ்யப் படைகள் விரைந்துள்ளன.

சோவியத் நாடு: பிரிக்கப்படாத ரஷ்யா, அதாவது சோவியத் யூனியனில் ஒரு பகுதியாக இருந்தது கஜகஸ்தான். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டில், பெரிய நிறுவனங்கள் ஏதும் இல்லாததால், பெரும்பாலான இயற்கை வளங்களை வெளிநாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிட்டது அரசு. இதனால் இங்கு உற்பத்தியாகும் பெரும்பாலான பெட்ரோலிய கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதனால் உள்நாட்டில் மக்களுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது.

என்ன பிரச்சினை? - இதற்காகவே, கஜகஸ்தான் அரசு எரிபொருள் விலையில் கட்டுப்பாடு விதித்திருந்து. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த எரிபொருள் கட்டுப்பாட்டை நீக்கிய அரசு சமையல் கேஸ், வாகன எரிபொருள் விலையை இரு மடங்கு உயர்த்தியது. கஜகஸ்தான் சிறிய நாடு, மக்கள் வறுமையிலும், அதிகமான வேலையின்மையிலும் சிக்கியிருக்கும் நேரத்தில் இரு மடங்கு விலை உயர்வைத் தாங்க முடியவில்லை.

எதற்காகப் போராட்டம்? - முதலில் ஹானாஜென் என்ற இடத்தில்தான் மக்கள் கேஸ், வாகன எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினர். அதன்பின் போாரட்டம் படிப்படியாக அடுத்தடுத்த நகரங்களுக்கும் பரவி, நாடு முழுவதும் மக்கள் புரட்சியும், கிளர்ச்சியும் ஏற்பட்டது. அதாவது கஜகஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போராட்டமாக மாறியிருக்கிறது. கேஸ் உயர்வுக்கு மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிகளிலும், சாலைகளிலும் கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

வறுமை, வேலையின்மை: சமையல் கேஸ் விலையைக் குறைக்க வேண்டும், ஆளும் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல நகரங்களில் மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய முயற்சி பெரும் கலவரத்தில் முடிந்து ஏராளமானோர் காயமடைந்தனர், பலர் உயிரிழந்தனர்.

ஏற்கெனவே கஜகஸ்தானில் மக்களிடையே ஏழை பணக்கார்ரகள் என்ற சமூகரீதியான ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் நிலையில் இந்த இரு மடங்கு விலை உயர்வு அதை மேலும் பெரிதாக்கும். உணவுப் பொருட்கள் விலை, அத்தியாவசியப் பொருட்கள் விலை உச்சகட்டத்துக்குச் செல்லும், பணவீக்கம் தற்போது 9 சதவீதம் இருக்கும் நிலையில் அது மேலும் அதிகரிக்கும்.

கஜகஸ்தான் முழுவதும் மக்களின் களர்ச்சியும், போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 12க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர், 8க்கும் மேற்பட்ட போலீஸாரும் உயிரிழந்தனர்.

அரசு பதவி விலகல்: மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய பிரதமரை பதவி விலகக் கோரி அதிபர் காசிம் ஜோமர்த் டோகாயேவ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஆளும் அரசு அதிகாரபூர்வமாக ஆட்சியிலிருந்து இறங்குவதாக அறிவித்தது. எரிபொருள் விலையையும், கேஸ் விலையையும் குறைக்கக் கூறி காபந்து அரசுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா உதவி: நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து, அதைக் கட்டுப்படுத்த, ரஷ்யா, அர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் அடங்கிய ராணுவக் குழுவின் உதவியை கஜகஸ்தான் அதிபர் காசிம் கேட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தலைநகர் அல்மாட்டியில் 2 வாரங்களுக்கு ஊரடங்கையும் அதிபர் டோக்கேயேவ் பிறப்பித்தார். இணையதள வசதி முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பல்வேறு செயலிகளின் செயல்பாடும் முடக்கப்பட்டுள்ளது.

மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புதிய பிரதமராக அலிகான் சமியலோவை அதிபர் டோக்கேயேவ் நியமித்துள்ளார்.

தணிக்கும் முயற்சி: கஜஸ்தானில் புதிய பிரதமர் பதவிக்கு வந்தவுடன் சமையல் கேஸ் விலையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி மக்களின் போராட்டத்தைத் தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதன்படி, சந்தை விலையிலிருந்து பாதி விலைக்கு சமையல் கேஸ் விலையைக் குறைக்கும் ஆலோசனையில் புதிய அரசு இறங்கியுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலைக்கும் விலைக் கட்டுப்பாடு நிர்ணயிக்கவும் அமைச்சரவைக் குழுவுக்குப் புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x