Published : 06 Jan 2022 01:51 PM
Last Updated : 06 Jan 2022 01:51 PM

2022-ம் ஆண்டு கிராமி விருது விழா ஒத்திவைப்பு: அமெரிக்காவை உலுக்கும் கரோனா தொற்று எதிரொலி

லாஸ்ஏஞ்சல்ஸ்: இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் ஜனவரி 31 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தநிலையில் கரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுவது போல, இசைத் துறையில் கிராமி விருதுகள் இருந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் கிராமி விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் அரங்கில் நேரலை பார்வையாளர்கள் மற்றும் இணையத்தில் இணைந்த பார்வையாளர்களுடன் ஜன. 31-ம் தேதி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஒமைக்கிரான் பரவலைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் கிராமி விருது வழங்கும் விழாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மற்றும் மாகாண அதிகாரிகள், சுகாதாரம், பாதுகாப்பு துறையினர், கலைஞர்கள், உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்து விழாவை ஒத்திவைக்க முடிவு செய்ததாக ரெக்கார்டிங் அகாடமி தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் மாறுபாடு காரணமாக நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 31 ஆம் தேதி நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் அபாயகரமானது என்பதால் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுவதாக ரெக்கார்டிங் அகாடமி தெரிவித்துள்ளது.

ரெக்கார்டிங் அகாடமி மற்றும் அதன் தொலைக்காட்சி கூட்டாளியான சிபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘‘ரெக்கார்டிங் அகாடமி மற்றும் சிபிஎஸ் ஆகியவை 64 வது ஆண்டு கிராமி விருதுகள் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளன. வேகமாக பரவி வரும் கரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு தாமதத்திற்கு காரணம்.

எங்கள் இசை சமூகத்தில் உள்ளவர்கள், நேரலை பார்வையாளர்கள் மற்றும் எங்கள் நிகழ்ச்சியை உருவாக்க அயராது உழைக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமையாக உள்ளது.

கரோனா வேகமாக பரவி வரும் சூழலில் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 31-ம் தேதி அன்று நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் அபாயகரமானது என கருதுகிறோம்’’

இவ்வாறு தெரிவித்துள்ளது. எப்போது நடத்தப்படும் என்ற விவரத்தை அறிவிக்கவில்லை என்றாலும் மீண்டும் நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோவிட்-19 காரணமாக கிராமி விருதுகள் தாமதமானது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஆண்டு, 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெரும்பாலான முக்கிய விருதுகள் நிகழ்ச்சிகளைப் போலவே, கரோனா வைரஸ் தொற்று உயர்வு காரணமாக கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டன.

2021 ஆம் ஆண்டு விழா, முதலில் கடந்த ஆண்டு ஜனவரி 31 அன்று திட்டமிடப்பட்டது, இறுதியில் மார்ச் 14 அன்று நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் கன்வென்ஷன் சென்டர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஸ்டேபிள்ஸ் சென்டர் என்று அழைக்கப்படும் அரங்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நடைபெற்றது. பெரும்பாலும் பரிந்துரைக்கப்பட்டவர்கள், சிறிய அளவில் விருந்தினர்கள் கொண்ட பார்வையாளர்களுடன் நடைபெற்றது.

வழக்கமாக கிராமி விருது விழா பெரிய இசை நிகழ்ச்சியுடனும், கொண்டாட்டத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேரடி நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க கூட்டம் இல்லாமல் நடந்து முடிந்தது.

‘‘இந்த ஆண்டு இசையின் மிகப்பெரிய இரவை எதிர்காலத்தில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம், அது விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று அகாடமி அறிக்கை தெரிவித்துள்ளது.

சன்டான்ஸ் திரைப்பட விழா ஜனவரி 20 அன்று தொடங்கவிருந்த அதன் நேரில் நிகழ்ச்சிகளை ரத்து செய்து ஆன்லைன் வடிவத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x