

தங்கள் நாட்டு கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஜப்பானின் க்யோடோ செய்தி நிறுவனம் தரப்பில், “கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியா செலுத்திய ஏவுகணை 500 கிமீ தூரம் சென்று இலக்கை தாக்கும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணை பற்றிய பிற தகவல் தற்போது கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனையை தென்கொரியாவும் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா. கடந்த ஆண்டு கண்டிருந்தது. இந்த நிலையில், வடகொரியா இந்த சோதனையை நடத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஏவுகணை சோதனைகள் பற்றி பேசியிருந்தார். அப்போது அவர், "எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம். தென்கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதப் போக்குமே வடகொரியா தனது ராணுவத்தை மேம்படுத்தக் காரணமாகிறது. தற்காப்புக்காகவே நாங்கள் ஏவுகணை பரிசோதனைகளைச் செய்கிறோம்.
வடகொரியா அதன் ராணுவ பலத்தை அதிகரிக்கவே விரும்புகிறது. போரை விரும்பவில்லை. நாங்கள் வலிமையாக இருக்க வேண்டும். நம் நாடு எதிர்கொள்ளும் ராணுவ அச்சுறுத்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை விட வித்தியாசமானது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.