

இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பாக ஆய்வு நடத்த முன் வந்த அமெரிக்க குழுவுக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திர கமிஷன் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கு நிலவும் மத சுதந்திரத்தை ஆராய்ந்து அறிக்கை தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக ஆய்வு நடத்த அந்த கமிஷன் முன் வந்தது. எனினும், அக்குழுவினருக்கு இந்தியா தரப்பில் விசா மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச மத சுதந்திர கமிஷன் தலைவர் ராபர்ட் ஜார்ஜ் கூறும்போது, ‘‘பாகிஸ்தான், சவூதி அரேபியா, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய மத சுதந்திரம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு எங்களது குழுவினர் சென்று வந்துள்ளனர். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்து தேசிய அரசு சகிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக் களை சந்தித்து வருகிறது. எனவே தான் இந்தியாவிலும் மத சுதந்திரம் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்தோம். ஆனால் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் எங்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது’’ என்றார்.
கடந்த காலங்களிலும் மத சுதந்திர ஆய்வுக்காக அனுமதி கேட்ட அமெரிக்க குழுவுக்கு விசா மறுக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாட்டிறைச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சைகள், சகிப்பின்மை ஆகிய விவகாரத் தால் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்ததை அடுத்து தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க குழு அனுமதி கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.