Last Updated : 31 Mar, 2016 07:47 AM

 

Published : 31 Mar 2016 07:47 AM
Last Updated : 31 Mar 2016 07:47 AM

பிரஸல்ஸ் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மோடி அஞ்சலி

பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரஸல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்.

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரஸல்ஸ் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்ற மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இங்கு நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சேரந்த ராகவேந்திரன் கணேசன் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். அஞ்சலி செலுத்தும்போது, ராகவேந்திரன் கணேசன் மற்றும் இதர பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எங்களின் கூட்டாளியாக இருப்பார் என ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள், ``மோடி இந்திய அரசியலின் எழுச்சி மனிதர். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அவர் கூட்டாளியாக இருப்பார் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவின் அனுபவத்திலிருந்து நாங்கள் ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்தனர்.

பிரஸல்ஸில் அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு பெல்ஜியம் ராணுவம் கூடுதல் பாதுகாப்பு அளித்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x