Published : 31 Mar 2016 07:54 AM
Last Updated : 31 Mar 2016 07:54 AM

பல்மைரா நகரம் மீட்பு; சிரிய படைகளுக்கு வெற்றி

ஐ.எஸ். படைகள் கைப்பற்றியிருந்த தொல்பழங்காலச் சின்னங்களைக் கொண்ட பல்மைரா நகரத்தை சிரிய ராணுவம் மீட்டுவிட்டது. இதற்கு ரஷ்ய ராணுவத்தினர் நிகழ்த்திய வான் தாக்குதல் பேருதவியாக இருந்தது. சிரியப் படைகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஐ.எஸ். படைகள் அந்நகரை விட்டு ஓடிவிட்டன. 2015 மே மாதம் ஐ.எஸ். படைகளால் கைப்பற்றப்பட்ட இந்த நகரம் ஓராண்டுக்குள் மீட்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி பழங்காலச் சின்னங்களின் அருமை பெருமைகளை உணர்ந்த அனைவருக்குமே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது.

யுனெஸ்கோ அமைப்பால், சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களாக இந்த நகரின் பழமை வாய்ந்த கோயில்களும் திறந்தவெளி கலையரங்கமும் அறிவிக்கப்பட்டிருந்தன. வெற்றி வளைவு, பால் ஆலயம் உள்ளிட்ட சின்னங்களில் பலவற்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டுகளைக் கொண்டு சேதப்படுத்தினர். அதில் பல சின்னங்கள் வெடித்துச் சிதறி சின்னாபின்னமாயின.

ஆனால், அகோரா என்ற கட்டுமானமும் ரோமானியக் கலையரங்கமும் அந்தத் தாக்குதல்களையும் தாக்குப்பிடித்து அப்படியே இருப்பது மீட்புக்குப் பிறகு தெரியவந்திருக்கிறது. சிரியாவின் தொல்பழங்காலக் கலைச்சின்னங்களின் தலைமைப் புரவலரான மம்மவுன் அப்துல் கரீம் இதைத் தெரிவித்திருக்கிறார்.

வெகு விரைவில் தொல்லியல் நிபுணர்கள் பல்மைராவுக்குச் சென்று பழங்காலச் சின்னங்களைப் பார்வையிட்டு சேதங்களின் தன்மை, அளவு குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். மீட்க முடிந்தவற்றை மீட்டு செப்பனிட்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவோம். முற்றிலும் சிதைந்தவை மீட்டுருவாக்கம் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இத்தகைய சின்னங்களை அழிக்க சர்வதேச பயங்கரவாதிகள் என்ன முயற்சி எடுத்தாலும் உங்களால் வரலாற்றை அழிக்க முடியாது, நாங்கள் சும்மா உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க மாட்டோம் என்று அவர்களுக்குக் கூற விரும்புகிறேன் என்றார்.

பழங்காலச் சின்னங்களில் கணிசமானவை முற்றாக அழிக்கப்படாமல் விட்டுவைக்கப்பட்டிருப்பது குறித்து சிரிய ராணுவ வீரர் ஒருவர் நிம்மதி தெரிவித்தார். எல்லாமே அழிந்துபோயிருக்கும் என்று நினைத்தோம், பல சின்னங்கள் அப்படியே இருந்ததைப் பார்த்ததும் நிம்மதி அடைந்தோம் என்று அவர் குறிப்பிட்டார்.

வியப்பைத் தரும் காட்சிகள்

பல்மைரா நகரைக் கைப்பற்றிய பிறகு சிரிய துருப்புகள், சிரிய அரசுக்கு ஆதரவான ஆயுதமேந்திய போராளிகள், ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆகியோர் அந்த பழங்காலச் சின்னங்களைப் பார்த்து வியப்படைந்தனர். பல்மைரா நகரின் புதுப் பகுதியில் ஓராண்டுக்கு முன்னால் சுமார் 70,000 பேர் வசித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.எஸ். படைகள் நகரை நோக்கி வருகின்றனர் என்பது தெரிந்த உடனேயே நகரை விட்டு வெளியேறினர். நாள்கணக்கில் நடந்த சண்டையில் பல்மைரா நகரின் புதிய பகுதியில் கட்டப்பட்டிருந்த மாடி வீடுகள் குண்டு வீச்சுக்கு இலக்காகி நொறுங்கி விழுந்துள்ளன. பல இடங்களில் வீடுகளுக்குப் பதில் கட்டடத்தின் உடைசல்கள்தான் மலையாகக் குவிந்துள்ளன. ஐ.எஸ். படைகளுடன் வந்த கல்லறைத் திருடர்கள், எப்போதோ புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கு அடியில் கூட நவரத்தினங்களும் பொன்னும் வெள்ளியும் இருக்கும் என்ற ஆசையில் அவற்றைப் பெயர்த்தெடுத்து ஆங்காங்கே அலங்கோலமாக்கியிருந்தனர்.

தொல்லியல் அறிஞர் பலி

இந்த நகரின் அரிய தொல்லியல் சின்னங்களை 40 ஆண்டுகளாக அருகில் இருந்து கவனித்துவந்த தொல்லியல் அறிஞர் காலித் அல் அஸ்ஸாத் என்பவரைக் கொன்று அவருடைய உடலை அங்கேயே பெரிய கம்பத்தில் கட்டித் தொங்க விட்டிருந்தனர்.

பல்மைரா என்ற இந்த நகரத்தை தாட்மூர் என்றும் அழைப்பார்கள். இங்கு பால் என்ற தேவதைக்குக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. மெசபடோமியா நாகரிகம் உச்சத்தில் இருந்த காலத்தில் பால் கோயில் இங்கே கட்டப்பட்டது. இங்கு சந்திரனுக்குரிய கடவுளாகக் கருதப்படும் அக்லி பால் வழிபடப்பட்டிருக்கிறார். சூரியனுக்கு உரிய கடவுளை யாரி பால் என்று அழைத்துள்ளனர். இந்தக் கோயில் பைசான்டியன் வரலாற்றுக் காலத்தில் தேவாலயமாக மாற்றப்பட்டிருக்கிறது. 1920-கள் வரையில் இதை மசூதியாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கட்டடத்தின் பழமை, தனித்தன்மை, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் அழகு, ஆண்டுகள் பலவானாலும் உறுதியை இழக்காத தன்மை, ஈர்ப்பு ஆகியவற்றுக்காக இதை உலகத் தொல்லியல் சின்னமாக அறிவித்தனர். அதன் பிறகு யுனெஸ்கோ மேற்பார்வையில் இதைப் பராமரித்துவந்தனர்.

அண்மைக் கிழக்கு நாடுகளின் கட்டடக் கலையும் கிரேக்க ரோமானியக் கலவையிலான கட்டடக் கலையும் இணைந்த கலைப் படைப்பு இது. சதுர வடிவிலான இந்த மாபெரும் கட்டடம் வடக்கிலிருந்து தெற்காக விரிந்தது. மிகவும் பிரம்மாண்டமான தூண்கள் இதன் விதானத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. இவற்றின் உயரமும் எண்ணிக்கையும் திண்மையும் அழகும் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டுபவை. வெற்றியைக் குறிக்கும் தனி தோரண வாயிலும் (சிலா தோரணம்) உண்டு. நகரைவிட சற்றே உயரமான நிலப்பரப்பில் மிக்க கலைநயத்தோடு எளிய தொழில்நுட்பத்தால் இவை கட்டப்பட்டுள்ளன. தாங்குதளத்திலிருந்து உத்தரம் வரையில் ஒரேயளவில் தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன.

அரை வட்ட வடிவிலான பார்வையாளர் அரங்கமும் மிகப் பிரம்மாண்டமான மேடையும் கொண்ட மாபெரும் திறந்த வெளி கலையரங்கம் இந்தச் சின்னங்களில் ஒன்று நவீன கால திறந்தவெளி கலையரங்குகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. காற்றோட்டம், வெளிச்சம் என்று எல்லா அம்சங்களும் இயற்கையாக இருப்பது இதன் தனிச் சிறப்பு.

இந்தக் கட்டடங்களின் தொன்மை மட்டும் அல்ல இவற்றை நிர்மாணிப்பதற்கு கணிதம், அறிவியல் கலை, தொழில்நுட்பம் ஆகிய அறிவுகள் தேவைப்பட்டிருக்கிறது. மெசபடோமியச் சமவெளியின் அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றின் சாட்சியாகவே காட்சி தருகிறது. இந்தக் கட்டடங்களை உருவாக்கிய கலைஞர்கள் கட்டடக் கலை, சிற்பக் கலை, இசை, வானியல் என்று எல்லாவற்றிலும் ஆழ்ந்த புலமை உள்ளவர்கள் என்பதைக் கட்டுமானமே சொல்லிவிடுகிறது. இந்தக் கட்டடங்களைக் காணும்போது வியப்பு, மகிழ்ச்சி, பெருமிதம் என்று பல்வேறு உணர்ச்சிகளும் மனதில் அலைமோதுகின்றன. இந்தக் கட்டடத்தின் நீள, அகல, உயரங்களுக்கு இடையிலான விகிதங்களும் அலங்காரங்களும் தூண்களைத் தாங்கும் வளைகளின் அமைப்பும் ஒவ்வொன்றாகப் பார்த்து ரசிக்கப்பட வேண்டியது.

கிரேக்கம், ரோமானியம், எகிப்து

கட்டடக் கலையில் முக்கியமான இடத்தைப் பிடிப்பவை எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமானியக் கட்டடங் களாகும். கிரேக்கக் கோயில்கள் எகிப்தியக் கோயில்களைவிடச் சிறியவை. எகிப்தியர்கள் சிகுரட் என்று அழைக்கப்படும் கூம்பு வடிவக் கோயில்களையும் பிரமிடுகளையும் அமைப்பதில் வல்லவர்கள். கிரேக்கக் கோயில்களில் டொரிக், அயனிக், கொறிந்தியன் என்ற 3 வகை ஒழுங்கமைதிகள் காணப்படும். இவற்றுக்குப் பிறகு வந்ததுதான் ரோமானிய கட்டடக் கலை. ரோமானியர்கள் பெருங் கற்களை அப்படியே வெட்டி எடுத்து பாளம் பாளமாக அடுக்கிக் கட்டடம் கட்டும் கலையிலிருந்து மாறுபட்டு சுண்ணாம்பு, மணல், சிறுகற்கள் போன்றவற்றை நீருடன் கலந்து அதிலிருந்து காரை தயாரித்துக் கட்டடத்தைக் கட்டினர். அந்தக் கட்டடங்கள் பார்க்க அழகாகவும் எல்லா தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்றதாகவும் எத்தகைய தாக்குதல்களையும் தாங்கும் வண்ணம் உறுதியாகவும் திகழ்கின்றன. காலம் செல்லச் செல்ல இந்தக் கட்டடங்கள் மேலும் உறுதிப்பட்டுக்கொண்டே வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. கிறிஸ்து பிறப்பதற்கு 17 நூற்றாண்டுகளுக்கு முன்பு ரோம் நகரை ஆண்ட ஹட்டியன் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டவை இந்தக் கலைச் சின்னங்கள் என்று கூறுகின்றனர்.

இவ்வளவு வரலாறும் பழமையும் நம்முடைய மூதாதையர்களின் அறிவு, உழைப்பு, கனிவு ஆகியவற்றையும் உள்ளடக்கிய இந்தக் கலைக் கோயில்களை பிற மத வழிபாட்டிடங்களாகக் கருதி, அழிக்க நினைத்த ஐ.எஸ். அமைப்பினரின் அறியாமையும் மூர்க்கத்தனமும் நமக்குள் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன. அதே வேளையில் இந்தக் கலைச்சின்னங்கள் காப்பாற்றப்பட்டனவே என்ற நிம்மதியும் ஏற்படுகிறது. இந்தக் கலைச்சின்னங்கள் அமைந்துள்ள இடம் அந்த காலத்தில் சீனத்திலிருந்து பட்டு வியாபாரிகள் ஐரோப்பாவுக்கு வருவதற்குப் பயன்படுத்திய பட்டுப் பாதையில் அமைந்திருப்பது கூடுதல் வியப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x