

பியாங்யாங்: இந்த புத்தாண்டில் வட கொரியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உணவுப் பற்றாக்குறையை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கிம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் புத்தாண்டு உரை கவனம் ஈர்த்துள்ளது. வட கொரியா என்றாலே ராணுவ பலம் பற்றி செய்திகள் தான் எப்போதும் வெளிச்சத்துக்கு வரும்.
கரோனா பெருந்தொற்று காரணமாக வட கொரியா தனக்குத் தானே கடுமையான கெடுபிடிகளை விதித்து மற்ற நாடுகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறது.
இதனால், இறக்குமதியையே நம்பியிருந்த வட கொரியா கடுமையான உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை தாங்களே விளைவித்துக் கொள்ளுமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியா தற்காப்புக்காக எல்லைகளை மூடியதால் இன்னும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் அதிபர் கிம் ஜோங் உன்னின் புத்தாண்டு உரை குறித்து வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான கேஎன்சிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புத்தாண்டில் வட கொரியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உணவுப் பற்றாக்குறையை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கிம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் கிம்மின் புத்தாண்டு உரையில் வழக்கமாக ராணுவ மேம்பாடு பற்றியே தகவல் வெளியாகும் சூழலில் இந்த ஆண்டு மக்கள் நலன் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயினும் ராணுவத்தைப் பலப்படுத்துதல் பற்றி கிம் பேசாமல் இல்லை. கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாகவே வட கொரியா தனது ராணுவத்தை பலப்படுத்த வேண்டியுள்ளது. இது இனியும் தொடரும் என்று கூறியுள்ளதாக கேஎன்சிஏ தெரிவித்துள்ளது.
இந்தப் புத்தாண்டில் கரோனா பெருந்தொற்று எதிர்ப்புக் கொள்கையை எவ்வித சிறிய குறைபாடும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்றும் கிம் ஜோங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கரோனா தொற்றே ஏற்படவில்லை எனக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.