

தலிபான் அமைப்பினருக்கு எதிராக ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால் அதற்கு பயந்து வெளியேறும் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழை வதை தடுத்து நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாயிடம் வலியுறுத்தியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
கர்சாயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நவாஸ், தீவிரவாதிகள் விஷயத்தில் இந்த ஒத்துழைப்பை தமக்கு நல்கும்படி கேட்டுக்கொண்டதாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் உறுதிசெய்துள்ளார். வடக்கு வஜிரிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ராணுவம்.இதற்கு பயந்து சுமார் 2000 பேர் ஆப்கானிஸ்தானுக்கு தப்பியதாக செய்திகள் வெளியாகின.
இதன் தொடர்ச்சியாக அதிபர் கர்சாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நவாஸ் திங்கள்கிழமை பேசினார்.இதனிடையே, தத்தா கேல் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் ஒன்றின் மீது போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தின. இதில் குறைந்தது 15 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலிபான்களுக்கு எதிராக நடத்தப்பட்டும் வரும் இந்த தாக்குதலில் சுமார் 184 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவம் தரப்பில் 8 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வடக்கு வஜிரிஸ்தானில் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால், 4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை செல்லும் திட்டத்தை பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் ரத்து செய்தார்.