Last Updated : 20 Mar, 2016 12:05 PM

 

Published : 20 Mar 2016 12:05 PM
Last Updated : 20 Mar 2016 12:05 PM

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்த 3 வீரர்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக சென்றனர். அவர்கள் 5 மாதங்கள் அங்கு தங்கி, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா உட்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமி திரும்புவார்கள். அதன்பின், புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அதன்படி, ‘எக்ஸ்பிடிஷன் 47’ என்றழைக்கப்படும் விண்வெளி பயணத்தை அமெரிக்க நாசா விண்வெளி வீரர் ஜெப் வில்லியம்ஸ், அலெக்ஸி ஓவ்சினின், ரஷ்யாவின் ‘ரோஸ்காஸ்மோஸ்’ ஆய்வு மைய விண்வெளி வீரர் ஓலெக் கிரிபோச்கா ஆகிய 3 வீரர்கள், சோயூஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு புறப்பட்டனர்.

கஸகஸ்தான் நாட்டின் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சோயூஸ் விண்கலம் நேற்று வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. முன்னதாக பூமியை 4 நான்கு முறை சோயூஸ் சுற்றிவந்தது. அதன்பின், விண்வெளி ஆய்வு மையத்துக்குள் 3 வீரர்களும் சென்றனர். இவர்களுடன் சேர்த்து இப்போது 6 வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர். ஜெப் வில்லியம்ஸ் உட்பட 3 வீரர்களும் அங்கு 5 மாதங்கள் தங்கி தொடர்ந்து ஆய்வு செய்வார்கள். இவர்களில் 3 முறை விண்வெளி மையம் சென்றவர் ஜெப் வில்லியம்ஸ். அத்துடன் அதிக நாட்கள் அந்த மையத்தில் தங்கியவரும் அவர்தான்.

உயிரியல், பூமி அறிவியல், மனிதவளம், இயற்பியல், தொழில்நுட்ப மேம்பாடு உட்பட பல பிரிவுகளில் இவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். விண்வெளியில் அதிக நாட்கள் மனிதர்கள் வாழும் நிலையை உருவாக்கினால், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் அல்லது விண்கற்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் எளிதாகும். அந்த நோக்கத்தில் விண்வெளி ஆய்வில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x