Last Updated : 28 Dec, 2021 07:02 PM

 

Published : 28 Dec 2021 07:02 PM
Last Updated : 28 Dec 2021 07:02 PM

பாக்., நாணய மதிப்பு கடும் வீழ்ச்சி: சர்வதேச நிதியத்தை நாடும் நிலையில் தள்ளாட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு நாணயம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க சர்வதேச நிதியத்தை அணுக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் பாகிஸ்தானிய ரூபாய் உலகின் மிக மோசமாக செயல்படும் நாணயங்களில் ஒன்று என்ற நிலையை அடைந்துள்ளது. கடந்த 3,4 ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 30.5 சதவீதம் குறைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இம்ரான் கான் அரசாங்கத்தின் கீழ் பணமதிப்பிழப்பு பெருமளவில் பணவீக்க அழுத்தத்தை தூண்டியது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 30.5 சதவீதம் மாற்று விகிதத்தின் தேய்மானம் அதிக பணவீக்கத்திற்கு வழிவகுத்தது என்று அவர்கள் நம்புகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டான் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது: உலகின் மிக மோசமாக செயல்படும் நாணயங்களில் ஒன்றாக இன்றைய நிலையில் பாகிஸ்தான் பணமதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 12 சதவிகிதம் சரிந்து, மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு டாலருக்கு 152.50 ஆகக் குறைந்த பிறகு 17 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டில் பொருளாதாரத்தை ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வர சர்வதேச நிதியத்தை (IMF) மீண்டும் நாட வேண்டிய நிலை பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் ரூபாயை நிலைநிறுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அமெரிக்க நாணயத்தின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் அதன் தேவையை எளிதாக்கவும் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ) பதுக்கல்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 30.5 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தி நியூஸ் இன்டர்நேஷனல் கூறியதாவது: ''பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஆகஸ்ட் 2018 இல் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.123 இல் இருந்து 2021 டிசம்பரில் ரூ.177 ஆக குறைந்துள்ளது, இது கடந்த 40 மாதங்களில் 30.5 சதவீதம் சரிவு. இது நாட்டின் வரலாற்றில் மிக அதிகமான பணமதிப்பிழப்பு ஆகும்.

முன்னாள் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அஷ்ஃபாக் ஹசன் கான் கூறுகையில், ''நாட்டின் நிதிக் கொள்கை பணவியல் மற்றும் மாற்று விகிதக் கொள்கைகளுக்கு அடிபணிந்துள்ளதால் பொருளாதாரக் கொள்கை வகுப்பதில் முழுமையான முறிவு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் மாற்று விகிதத் தேய்மானம் அதிக பணவீக்கம், பொதுக் கடன் மற்றும் கடன் சேவை ஆகியவற்றுக்கு வழிவகுத்தது'' என்று கான் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x