பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்க குடியரசு கட்சி எதிர்ப்பு: அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் தாக்கல்

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்க குடியரசு கட்சி எதிர்ப்பு: அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் தாக்கல்
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்க அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக செனட் சபையில் குடியரசு கட்சி தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக குடியரசு கட்சியின் மூத்த செனட் உறுப்பினர் ராந்த் பால், செனட் சபையில் கடந்த வாரம் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். இது வெற்றி பெற்றால் பாகிஸ்தானுக்கு போர் விமானம் விற்க முடியாது.

இதுகுறித்து சக உறுப்பினர் களுக்கு பால் கடிதம் எழுதி உள் ளார். அதில், “இந்தத் தீர்மானம் மீது அவையில் விவாதம் நடை பெறும்போது ஆதரவு தெரிவிக்க வேண்டும். அமெரிக்கர்களின் வரிப் பணத்தின் மூலம் மானிய விலையில் பாகிஸ்தானுக்கு போர் தளவாடங்களை வழங்குகிறோம். ஆனால், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் அந்த நாடு பொறுப்புடன் செயல்படவில்லை” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தானுக்கு போர் விமானம் விற்பது தொடர்பாக அமெரிக்க அரசு நேற்று முன்தினம் முறைப்படி அறிவிக்கை வெளியிட்டது. அதில், “தெற்கு ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவுவது என்ற தேசிய பாதுகாப்பு இலக்கின்படியும் வெளியுறவுக் கொள்கை அடிப்படையிலும் பாகிஸ்தானுக்கு 8 எப்-16 ரக போர் விமானங்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் பால் ரையனுக்கு பாதுகாப்புத் துறை கடந்த பிப்ரவரி 11-ம் தேதி எழுதிய கடித நகலும் இந்த அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டதால் இந்த போர் விமானங்களை விற்பதாகவும் இதன் விலை சுமார் ரூ.4,700 கோடி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, “தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் மீறி வருகிறது. எனவே அந்த நாட்டுக்கு போர் விமானங் களை விற்கக்கூடாது” என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in