

ஷாங்காயைச் சேர்ந்தவர் யி ஜிஃபெங். மங்கோலியாவில் கடந்த 12 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். அலாஷான் பாலைவனத்தில் மீண்டும் காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 16 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தன் மகனின் நினைவாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். ’’என் ஒரே மகன் ஜப்பானில் சாலை விபத்தில் பலியாகிவிட்டான். காற்று, மழை, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என இயற்கையின் ஒவ்வொரு படைப்பையும் மிகவும் நேசித்தான். அந்த வயதிலேயே பாலைவனத்தில் மரங்களை நட்டு, சோலைவனமாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தான். என் மகனின் லட்சியத்தை நான் நிறைவேற்றி வருகிறேன்.
ஒவ்வொரு மரத்தை நடும்போதும் என் மகன் என்னுடனேயே இருக்கிறான் என்பதை உணர்கிறேன். என் மகனின் இன்சூரன்ஸ் பணம் 1.76 கோடி ரூபாய் கிடைத்தது. 2003ம் ஆண்டு ‘க்ரீன் லைஃப்’ என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தோம். என் மகனின் லட்சியத்தை நிறைவேற்ற ஆரம்பித்த இந்தத் திட்டம், இன்று மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. சீனாவில் மரங்கள் குறைந்து வருகின்றன.
எங்களுடைய சேமிப்பு, 2 வீடுகளை விற்றுக் கிடைத்த பணம் முழுவதையும் மரங்கள் நடுவதில் செலவிட்டிருக்கிறேன்’’ என்கிறார் யி ஜிஃபெங். 66 வயதில் தினமும் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். மீதி நேரம் முழுவதும் மரம் நடும் பணியில் இருக்கிறார். இவரைப் போலவே குழந்தைகளை இழந்தவர்கள், இந்தத் திட்டத்தில் சேர்ந்து, ஆர்வத்துடன் வேலை செய்து வருகிறார்கள்.
மரங்களின் தாய்!
ஸ்வீடன் பல்கலைக்கழகத்தில் பூனைகள் பற்றிய 5 ஆண்டு ஆராய்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு பூனைகளின் ஒலிகளுக்கு என்ன அர்த்தம் என்பதை வெளியிட இருக்கிறார்கள். காட்டுப் பூனைகள் முதிர்ச்சியடையும் வரை மியாவ் என்று குரல் கொடுக்கின்றன. வளர்ந்த பிறகு தாயை அழைக்கவோ, பால் குடிக்கவோ அவசியம் இல்லை என்பதால் கைவிட்டுவிடுகின்றன. ஆனால் வீட்டில் வளர்ந்து வரும் செல்லப் பூனைகள், மனிதர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால், ’மியாவ்’ சொல்லிக்கொண்டேருக்கின்றன.
குரல், பார்வை மூலம் உணவு, அன்பு போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் கேட்கின்றன. வெவ்வேறு இடங்களில் இருந்து 50 பூனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு மியாவ் ஒலி எப்படி மாறுகிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். நட்பு, மகிழ்ச்சி, கோபம் போன்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரே மியாவ், பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. விலங்குகள் ஆராய்ச்சியாளர் ஷரோன் க்ரோவெல் டேவிஸ், பூனையின் மொழியைப் புரிந்துகொண்டு சில தகவல்களை வெளியிட்டார். பூனையின் மெல்லிய உறுமலுக்கு ‘தயவுசெய்து எங்கேயும் சென்றுவிடாதீர்கள்’ என்ற அர்த்தத்தைக் கண்டுபிடித்தார். பிறகு பூனையைப் பரிசோதித்தபோது, உடல்நிலை சரியில்லாமல் இருந்தது தெரிந்தது. பூனை கால்களைச் சுரண்டினாலோ, தாவினாலோ நம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் என்கிறார்.
பூனை மொழி!