தன்பாலின உறவை மையப்படுத்திய நார்வே சான்ட்டா விளம்பரம்: கவனம் ஈர்ப்பும் எதிர்ப்பும்

தன்பாலின உறவை மையப்படுத்திய நார்வே சான்ட்டா விளம்பரம்: கவனம் ஈர்ப்பும் எதிர்ப்பும்

Published on

நார்வே நாட்டில் வெளியாகியுள்ள சான்ட்டா க்ளாஸ் விளம்பரம் ஒன்று வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதன் மையம், தன்பாலின ஈர்ப்பாளர் ஆதரவு என்பதே கவனிக்கத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கால விளம்பரங்கள் ஒரு பாரம்பரியம். பல தரப்பட்ட பொருள்கள், சேவைகளுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் விளம்பரங்கள் வெளியாகும். அதிலும் குறிப்பாக சான்ட்டாவுடன் வெளியாகும் விளம்பரங்கள் மக்களை ஈர்க்கும். இந்த கிறிஸ்துமஸுக்கு நார்வே நாட்டு தபால் சேவைத் துறை சார்பில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 'வென் ஹென்ரி மீட்ஸ் சான்ட்டா' (When Harry meets Santa) என்ற அந்த விளம்பரம் 4 நிமிடங்கள் ஓடுகிறது. நடுத்தர வயது ஆண் ஒருவர் வடதுருவத்தில் உள்ள சான்ட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் இந்த கிறிஸ்துமஸுக்கு நீங்கள் எனக்கு வேண்டும் என்று எழுதி அனுப்புகிறார். அவருடைய ஆசை நிறைவேறுகிறது. அந்த விளம்பரத்தின் முடிவில் ஹென்ரியும், சான்ட்டாவும் முத்தத்தை பரிமாறிக் கொள்கின்றனர். அப்போதுதான் நமக்கு அந்த விளம்பத்திரன் நோக்கம் புரிகிறது. ஆம், இந்த சான்ட்டா ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்.

இந்த விளம்பரம் குறித்து நார்வே போஸ்டல் துறை அதிகாரி மோனிகா சோல்பெர்க் கூறுகையில், "நாங்கள் தன்பாலின உறவை எதிர்க்கும் சட்டம் ரத்து செய்யப்பட்ட 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாட விரும்பினோம். ஆகையால், இந்த விளம்பரத்தை வெளியிட்டோம். இந்த விளம்பரத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த வீடியோ யூடியூபில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது" என்றார்.

ஆனால், நார்வே நாட்டைச் சேர்ந்த சிலரும், நார்டிக் நாடுகளைச் சேர்ந்த சிலரும் இந்த விளம்பரத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த விளம்பரம் கிறிஸ்துமஸ் தாத்தாவை சிறுமைப்படுத்திவிட்டது என்று தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விளம்பரம் குறித்து பிரிட்டனின் சர்வே நிறுவனமான யூகவ் என்ற அமைப்பு ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் சான்ட்டா ஒரு தன்பாலின உறவாளராக இருக்கலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு 39% பேர் ஏற்றுக்கொள்ளலாம் என்றும், 41% பேர் ஏற்க இயலாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக இந்த விளம்பரம் உலகம் முழுவதும் ஆதரவும், எதிர்ப்புமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, வாழ்வியல் - பண்பாட்டுச் சூழலில் எல்ஜிபிடி (LGBT) சமூகத்தினரின் சமத்துவம் நோக்கியப் பயணத்துக்கு இந்த விளம்பரம் உறுதுணையாக இருக்கிறது என்ற கருத்தும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தின் யூடியூப் இணைப்பு > When Harry met Santa ENG SUB

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in