

துணி மாஸ்க் பயன்படுத்தும் முன் ஒன்றுக்கு இருமுறை யோசிக்குமாறு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், முகக்கவசம் என்பதை மக்கள் ஆடைக்கேற்ப அணியும் ஒரு ஃபேஷன் உபகரணம் போல் ஆக்கிவிட்டதாக வருத்தம் தெரிவிக்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் முதன்மை சுகாதார சேவைத் துறை பேராசிரியர் ட்ரிஷ் க்ரீன்ஹால்க், "துணியால் முகக்கவசம் பாதுகாப்பு தரலாம். ஆனால் சில ரகம் எந்தவித பாதுகாப்பும் நல்காது. ஒமைக்ரான் மற்ற திரிபுகளைவிட வேகமாகப் பரவுவதால் இரண்டு அல்லது மூன்றடுக்குகள் கொண்ட முகக்கவசங்களே பலன் தரும். மற்றபடி ஆடைக்கு ஏற்ற அணிகலன் போல் இருக்கும் துணியாலான முகக்கவசத்தால் எவ்வித பலனும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பிரிட்டன் அரசு பொதுப் போக்குவரத்து, கடைகள், ஆகியனவற்றில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனக் கூறியுள்ளது.
முகக்கவசங்கள் பற்றி பல்வேறு அறிக்கைகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. துணி முகக்கவசங்கள் எந்தவித பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதில்லை. ஆனால், N95 முகக்கவசங்கள் 95% நோய்க்கிருமிகளை வடிகட்டுகிறது.
ஆனால், நீங்கள் N95 முகக்கவசமே அணிந்தாலும் கூட அதை உங்கள் மூக்கையும் வாயையும் முழுமையாக மூடுவது போல் அணியாவிட்டால் அதனால் பலனில்லை. சுற்றுச்சூழல் மற்றும் செலவு ரீதியாக துணி முகக்கவசங்களை நீங்கள் அணிய விரும்பினால் மறுமுறை துவைத்து பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை வாங்கி அணியலாம் என்று ட்ரிஷ் கூறியுள்ளார்.
கனடா நாட்டில் மக்கள் ஒரே அடுக்கு கொண்ட துணி முகக்கவசம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.